கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மே 6ஆம் தேதி ஹூப்ளியில் உரையாற்றிய சோனியா காந்தி, “கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது” என்றார்.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இந்த நிலையில், சோனியா காந்தி இறையாண்மை என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இது பாரதிய ஜனதா கட்சியின் பொய்யான மற்றும் போலியான பரப்புரை எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது. இதற்கிடையில், இறையாண்மை என்ற வார்த்தையை பிரயோகப்படுத்துவது துக்டே துக்டே கும்பலின் நிகழ்ச்சி நிரல் என மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக தலைவர்கள் தருண் சுக், அனில் பலூனி மற்றும் ஓம் பதக் ஆகியோர், இந்தியாவை மோசமாக காட்ட தன்னால் இயன்ற அனைத்தையும் காங்கிரஸ் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினர்.
ஹூப்ளியில் சோனியா காந்தி ஆற்றிய உரையில், “பாஜக அரசு கொள்ளை, பொய், ஆணவம் மற்றும் வெறுப்பு போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.
அதிலிருந்து விடுபடாமல், கர்நாடகாவோ அல்லது தேசமோ வளர்ச்சியடைய முடியாது. அவர்களின் தலைவர்கள் மிகவும் திமிர்பிடித்துள்ளனர்.
அவர்கள் எந்த கேள்விகளுக்கும் கடிதங்களுக்கும் பதிலளிக்க மாட்டார்கள். அரசியலமைப்பு அமைப்புகள் தங்கள் பாக்கெட்டில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்” எனக் கூறினார்.
மேலும், “இன்று, அவர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் சூழ்நிலை உள்ளது. வெற்றி பெறாவிட்டால் கர்நாடகாவுக்கு மோடியின் ஆசி கிடைக்காது.
பாஜக தோற்றால் இங்கு கலவரம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். ‘கர்நாடக மக்களை பலமற்றவர்கள், பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள்’ என்று உங்கள் சார்பாக அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கர்நாடக மக்கள் யாருடைய ஆசீர்வாதத்திலும் தங்கியிருக்கவில்லை, மாறாக அவர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியை நம்பியிருக்கிறார்கள். கர்நாடக மக்கள் கோழைகள் அல்லது பேராசைக்காரர்கள் அல்ல.
கர்நாடக மக்கள் தாங்கள் எதனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை மே 10ஆம் தேதி உங்களுக்குச் சொல்வார்கள். பொதுமக்கள் தாங்களாகவே முடிவெடுக்கிறார்கள்” என்றார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்தர் யாதவ், “காங்கிரஸின் வீண் விளம்பர பேச்சுகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த விளக்கங்களும் அளிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையமும் சில ஆதாரங்களை கேட்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“