சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அடுத்த தலைவராக ஆசம் கான் (74) பார்க்கப்படுகிறார். ராம்பூர் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களிலும் ஆசம் கான் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். இவர் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 9 முறை உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நில அபகரிப்பு, ஊழல், குற்றவியல் அத்துமீறல் என 83 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் அவருக்கு 27 மாதங்கள் சிறை விதிக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த ஆண்டு அக்டோபரில், 2019 பொதுத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக ஆசம் கான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு, அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறி போனது. மேலும் அவரின் ராம்பூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் (எஸ்.பி) மூத்த தலைவர் ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆசாம் எம்.எல்.ஏ ஆகியோருக்கு 15 ஆண்டுகள் பழமையான வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ராம்பூரில் உள்ள சுவார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அப்துல்லா ஆசாம் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1, 2008 அன்று ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் (CRPF) முகாம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 ஜவான்கள் மற்றும் ஒரு ரிக்ஷா இழுப்பவர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு நாளுக்குப் பிறகு, மொராதாபாத் மாநில நெடுஞ்சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆசம் கான் மற்றும் ஏழு பேர் மீது சஜ்லைட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று திங்களன்று, மொராதாபாத்தில் உள்ள சிறப்பு எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் அப்துல்லா ஆசாமும், ஆசம் கானும் ஆஜராகினர். “கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஸ்மிதா கோஸ்வாமி ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். அவர்களுக்கு தலா ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர், ஆசம் கான் மற்றும் அவரது மகன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர், அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேவையான உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர், ”என்று மொராதாபாத் மாவட்ட அரசு வழக்கறிஞர் (டிஜிசி) நிதின் குப்தா கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341 (தவறான கட்டுப்பாடு) மற்றும் 353 (பொது ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) மற்றும் குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டத்தின் கீழ் இருவரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது" என்றும் கூறியுள்ளார்.
மற்றொரு அரசு வழக்கறிஞர் மோகன்லால் விஷ்னோய், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 7 பேரும் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டதாக கூறினார். அவர்களில் அம்ரோஹாவின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ மெஹபூப் அலி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்-கள் ஹக்கி இக்ராம் குரேஷி மற்றும் நைம்-உல்-ஹசன் ஆகியோரும் அடங்குவர். மொத்தம் 8 அரசு தரப்பு சாட்சிகளும், 17 எதிர் சாட்சிகளும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டனர்.
வழக்கின் படி, இந்த வழக்கு ஜனவரி 2, 2008 அன்று தொடங்கியது, மொராதாபாத் மாவட்டத்தின் சாஜ்லெட் காவல் நிலையப் பகுதியில் அப்துல்லா ஆஜாம் மற்றும் ஆசம் கான் பயணித்த கார் கண்ணாடிகளில் கருப்பு நிற படம் இருந்ததற்காக நிறுத்தப்பட்டது. காரை ஓட்டி வந்த அப்துல்லா ஆசாம், வாகனத்தின் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், அதைச் சமர்ப்பிக்கத் தவறியதாக அரசுத் தரப்பு கூறியது.
இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பின்னால் அமர்ந்திருந்த ஆசம் கான் வெளியேறினார். இது வாக்குவாதத்தை அதிகரித்தது என்று அரசு வழக்கறிஞர் கூறினார். அதைத் தொடர்ந்து, பல சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, காவல்துறையினருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்செயலாக, உ.பி.யின் முன்னாள் அமைச்சர் ஆசம் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.