மே - 4ல் இருந்து அமலபடுத்தப்படும் மூன்றாவது பொது முடக்கநிலை காலத்தில் பொருளாதாரம் மற்றும் இதர செயல்பாடுகள் அதிகரிக்கும் நடவடிக்கையாக நாட்டில் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. ஆந்திர, கர்நாடகா, உத்தர் பிரேதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் நேற்று முதல் மதுக்கடைகளை திறந்தன.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் நேற்று முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது. கடந்த மார்ச் 23 முதல் மூடப்பட்ட 150க்கும் அதிகமான அரசுசார்பு மதுக்கடைகள் நேற்று முறையாக திறக்கப்பட்டன.
கடுமையான சமூக விலகல் நெறிமுறையை அதிகாரிகள் முறையிட்டாலும், மது விற்பனை நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால், சில பகுதிகளில், காவல்துறையினர் லத்தி சார்ஜ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி அரசு தலைநகரில் விற்கப்படும் அனைத்து வகை மதுபானங்களின் விலையை, மேலும் 70 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பாணையை வெளியிட்டது. தில்லி அரசு மதுவுக்கு "சிறப்பு கொரோனா வரி" விதிக்கிறது.
ஒரு இரவு நேர அறிவிப்பில்,“சில்லறை உரிமதாரர்கள் மூலம் விற்கப்படும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் அதிகபட்சமாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கட்டணங்களுக்காக டெல்லி அரசு 2009 கலால் சட்டத்தை திருத்தியுள்ளது புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மதுபான விற்பனை மூலம் மாதத்திற்கு சுமார் ரூ .500 கோடி டெல்லி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.