முடிவுக்கு வரும் சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாடு; நிறுவனத்தையே விற்க NSO முடிவு

அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களை கண்காணிக்க உலக நாடுகளின் அரசுகளுக்கு இந்த ஸ்பைவேர் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bloomberg 

Spyware firm NSO mulls shutdown of Pegasus : சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஒ. தற்போது கடன் தொல்லையால் நெருக்கடிகளை சந்தித்து வருவதால் பெகாசஸ் யூனிட்டை மொத்தமாக மூடுவது குறித்தும், என்.எஸ்.ஒ. நிறுவனத்தையே வேறு நபர்களுக்கு விற்றுவிடுவது குறித்தும் யோசனை செய்து வருவதாக அந்த நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

நிறுவனத்தை தொடர்ந்து நடத்த நிதி அல்லது மொத்தமாக விற்பனை செய்வது குறித்து பல தரப்பட்ட முதலீட்டு நிதி நிறுவனங்களிடம் என்.எஸ்.ஒ. பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Moelis & Co. நிறுவனத்திடம் இருந்து ஆலோசகர்களையும், Willkie Farr & Gallagher சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் இருந்து வழக்கறிஞர்களையும் நிறுவனம் உதவிக்காக அழைத்து வந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு நிதி நிறுவனங்கள் என்.எஸ்.ஒ. மீது ஆர்வம காட்டியுள்ளதாகவும், பெகாசஸை கட்டுப்படுத்துவது மற்றும் மூடுவது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெகாசஸிற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பத்தை தற்காப்பு சைபர் பாதுகாப்பு சேவைகளாக மாற்றுவதற்காகவும், இந்நிறுவனத்தின் ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் புதிதாக 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மூலதனமாக செலுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹெர்ஸ்லியாவை தளமாகக் கொண்ட NSO இன் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். நியூயார்க்கை தளமாகக் கொண்ட Moelis நிறுவனத்தின் பிரதிநிதியும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதே போன்று வில்க்கி ஃபார் நிறுவனத்தின் பிரதிநிதியும் கருத்து கூற மறுப்பு தெரிவித்துவிட்டார். சாத்தியமான பரிவர்த்தனையின் கூறுகள் குறித்து முன்பே டெப்ட்வைரலில் (Debtwire) செய்திகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பெகாசஸ் ஸ்பைவேரால் தனிப்பட்ட நபர்களின் அலைபேசியை கண்காணிக்க இயலும். அதனை தவறாக பயன்படுத்தியதற்காக உயர்மட்ட தனியுரிமை மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகளின் மையத்தில் என்.எஸ்.ஒ. நிறுவனம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களை கண்காணிக்க உலக நாடுகளின் அரசுகளுக்கு இந்த ஸ்பைவேர் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ஒன்பது வெளியுறவுத் துறை ஊழியர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்ய சமீபத்திய மாதங்களில் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகின.

குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கில் சட்ட அமலாக்க துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த ஸ்பைவேரை நாங்கள் விற்பனை செய்தோம். அதனை தவறாக பயன்படுத்திய வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தத்தை நாங்கள் முடித்துக் கொண்டோம் என்றும் என்.எஸ்.ஒ. அறிவித்தது. அமெரிக்க வர்த்தகத் துறை NSO-வை தடுப்புப் பட்டியலில் வைத்தது. எங்கள் தொழில்நுட்பங்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்கள் மற்றும் கொள்கைகளை ஆதரிப்பதால் இந்த முடிவை மாற்ற நாங்கள் முயற்சிகள் மேற்கொள்கின்றோம் என்று நவம்பர் மாதம் என்.எஸ்.ஒ. கூறியது.

ஆப்பிள் நிறுவனம் என்.எஸ்.ஒ. மீது வழக்கு பதிவு செய்தது. பெகாசஸ் ஸ்பைவேரை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது பயன்படுத்துவதை தடுக்கக் கோரிய ஆப்பிள் நிறுவனம் யாருடைய அலைபேசிகள் எல்லாம், அரசு ஆதரவுடன் வேவு பார்க்கப்பட்டதோ அது குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்போம் என்றும் கூறியது.

இந்த நிறுவனத்தின் மதிப்பை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களாக அறிவித்த 2 ஆண்டுகளில் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் இந்த நிறுவனம் தத்தளித்து வருகிறடு. அமெரிக்காவின் தடை என்.எஸ்.ஒ. மீது மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் கடந்த மாதம் நிறுவனம் தனது கடன்களின் விதிமுறைகளை மீறும் அபாயம் அதிகரித்து வருவதாகக் கூறியது.

2019ம் ஆண்டு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்.எஸ்.ஒ நிறுவனத்தின் முகமதிப்பை மதிப்பிட்டு கடனாக வழங்கப்பட்டது. நவம்பர் மாதம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு டாலருக்கு 70 செண்ட்டுகள் என்று இதன் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டது. தற்போது இது மேலும் குறைந்து 50 செண்ட்டுகளாக உள்ளது என்று விவகாரம் குறித்து நன்கு அறிந்த நபர்கள் அறிவித்துள்ளனர்.

என்.எஸ்.ஒ. பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்நிறுவனம் மிகச்சிறியதாகவும், மதிப்பற்றதாகவும் மாறிவிடும். ஏன் என்றால் என்.எஸ்.ஒவின் வருமானத்தில் 50%க்கும் மேலான வருமானம் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கிடைக்கப்பெற்றது. இந்த ஆண்டு இதன் விற்பனை மட்டும் 230 மில்லியனாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கின்றது. 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட விற்பனை மதிப்பைக் காட்டிலும் 8% இது மிகவும் குறைந்தது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spyware firm nso mulls shutdown of pegasus sale of company

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express