இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதன் பின்னர் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதனையடுத்து மாவட்டங்களின் தேர்தல் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்க:
Sri Lanka President Dissanayake’s coalition wins snap polls: Report
தற்போது ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 31 இடங்களை பிடித்துள்ளனர்.
3 ஆவது இடத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 6 இடங்கள் கிடைத்துள்ளன. 4 ஆவது இடத்தில் 3 இடங்களுடன் புதிய ஜனநாயக முன்னணி கட்சி உள்ளது. மகிந்த ராஜபக்சே குடும்பத்தின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 இடங்களையும் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியின் அனுரா குமார திசநாயக்க வெற்றி பெற்றார்.இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டிய நெருக்கடி அனுராவுக்கு ஏற்பட்டது. இதனையடுத்தே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
இலங்கையில் 225 நாடாளுமன்ற பதவிக்கு , 196 பேர் 22 தொகுதிகளில் இருந்து நேரடியாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மீதமுள்ள 29 இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் நாடு தழுவிய வாக்குப் பங்கின் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.
17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 22 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் முடிவுகள் நீண்டகால பொருளாதார பிரச்சினைகளை கையாள்வதற்கான திஸாநாயக்கவின் ஆணையை பலப்படுத்துகிறது. ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் இருந்தாலும், அவருக்கு முழு அமைச்சரவையை நியமிக்கவும், வரிகளை குறைப்பதற்கும், உள்ளூர் தொழில்களை ஆதரிப்பதற்கும், வறுமையை நிவர்த்தி செய்வதற்கும் பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவருக்கு ஆதரவு தேவைப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“