இலங்கை அதிபர் தேர்தலில் நமல் ராஜபக்சே கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அவரது குடும்பம் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரமதாசா, என்.பி.பி எனும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் அநுர குமார திசநாயக்க, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, பி.எஸ்.ஏ எனும் போபகே மக்கள் போராட்ட கூட்டணி சார்பில் நுவான் போபகே உள்பட 38 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
மொத்தம் 225 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், வரலாற்றில் இல்லாதவாறு அமைதியாக நடந்து முடிந்தது. நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கம் முதலே அநுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வந்தார்.
இலங்கையின் தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இதுவரை எண்ணப்பட்ட ஒரு மில்லியன் வாக்குகளில் 53 சதவீத வாக்கு எண்ணிக்கையுடன் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் திசநாயக்க முன்னணியில் உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 22 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் பெரும் பின்னடைவை சந்தித்தார். ஏறத்தாழ தோல்வியடைந்து விட்டதால், நமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டனர். கட்டுநாயக்க பண்டார சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றுள்ளனர். அமெரிக்காவுக்கு செல்ல நேரடி விமானம் இல்லாததால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று இலங்கை அதிபராக தேர்வாகவுள்ள அநுர குமார திசநாயக்க பிரசாரத்தின் போது ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக பேசியிருந்தார். இத்தகைய சூழலில் தான் நமல் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.