இந்தியாவுக்கு பாதகமான எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது நாட்டின் பிரதேசம் பயன்படுத்தப்பட மாட்டாது என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க பேசினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Sri Lankan president Dissanayake meets PM Modi, vows not to let the country’s territory be used for anti-India activities
இரு தலைவர்களும் ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு சந்திப்பை நடத்தினர், அங்கு திசநாயக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் "முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியின் போது" உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் மற்றும் மானியங்கள் மூலம் இந்தியா இலங்கைக்கு உதவியதாக பிரதமர் மோடி கூறினார்.
அண்டை நாட்டில் “நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு” குறித்து விவாதித்ததாக கூறிய பிரதமர் மோடி, தமிழ் சிறுபான்மையினரின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி வந்திறங்கிய இலங்கை அதிபர் திசநாயக்க, ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணத்தில் உள்ளார். அண்மையில், இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அந்நாட்டு அதிபர் திசநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவென பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இலங்கை அதிபர் திசநாயக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்தார். அண்மையில், இலங்கையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திசநாயக்க டெல்லியில் ஒரு வணிக நிகழ்வில் பங்கேற்கிறார், அதன்பிறகு புத்த கயாவுக்குச் செல்கிறார்.
இருதரப்பும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த பயணம் இருதரப்பு உறவுகளில் புதிய வேகத்தையும் ஆற்றலையும் செலுத்தியுள்ளது என்றும், அவர்கள் முதலீடு சார்ந்த வளர்ச்சி, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய "தொலைநோக்கு பார்வையில்" செயல்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
சம்பூர் சூரிய சக்தி திட்டம், இலங்கைக்குள் ரயில் இணைப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான படகு மற்றும் விமான சேவைகள், டிஜிட்டல் அடையாள திட்டம் மற்றும் கல்வி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஹைட்ரோகிராஃபி பணிகள் குறித்தும் விவாதித்தனர். திசநாயக்க மீனவர்களின் பிரச்சினைக்கு "நீடித்த" மற்றும் "நிலையான தீர்வை" கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் மூலம் விவாதிக்கப்படும் விஷயங்களில் கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மோடி குறிப்பிட்டுப் பேசினார். மேலும், பரஸ்பர நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய ராமாயண சர்க்யூட் மற்றும் புத்த சர்க்யூட் பற்றி விவாதித்தனர்.
“இலங்கை அதிபர் திசநாயக்கவின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திசநாயக்க பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு பயணம் இது, இலங்கையின் புதிய அதிபர் - அரசியல் உயரடுக்கினரால் ஆளப்படும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை தோற்கடித்ததன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
திசநாயக்கவுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் துணை நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் சென்றுள்ளனர். திசநாயக்கவின் வெற்றிக்குப் பின்னர் பதினைந்து நாட்களுக்குள் கொழும்புக்கு பயணம் செய்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை அதிபர் திசநாயக்க-வை புது டெல்லிக்கு வருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) அரசாங்கம் செப்டெம்பர் 23-ம் தேதி பதவிக்கு வந்த பின்னர் இலங்கைக்கு பயணம் செய்த முதலாவது வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.