/indian-express-tamil/media/media_files/2025/01/03/2f8sXxgU7nQFE9KTtvuN.jpg)
புதுச்சேரியில் புத்தாண்டு அன்று இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கைத் தமிழரின் 5 உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த விஜயகுமார்- புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரேம்குமார் (19). 12-ஆம் வகுப்பு படித்தவர். மேல் படிப்பு படிக்க முடியாமல் பெயிண்டர் ஆக பணியாற்றி வந்தார்.
கடந்த 31 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு சென்றவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே தவறி விழுந்தார். தலையில் காயங்களுடன் அருகில் உள்ள காலாப்பட்டு பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கும் மருத்துவர்கள் அவரது மூளைச்சாவை உறுதி செய்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
தனது மகன் இறந்தாலும் அவனது உறுப்புகள் மூலம் ஐந்து பேர் உயிருடன் வாழ்வது மிக சிறந்தது. இதேபோல் மற்றவர்களும் உடல் தானம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில் பிரேம் குமாரின் கிட்னி அரசு மருத்துவமனைக்கு ஒன்றும், தனியார் மருத்துவமனைக்கு ஒன்றும் அனுப்பப்பட்டது. சென்னை மற்றும் ஹைதராபத்திற்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் 5 பேர் பயனடைய உள்ளனர். இதுபோன்ற சம்பவம் புதுச்சேரி மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்று இருப்பதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகேசன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.