ஸ்ரீதேவி இறுதி அஞ்சலி LIVE UPDATES : நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிச்சடங்கு!

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் அனில் கபூரின் இல்லத்திற்கு தொடர்ச்சியாக பிரபலங்கள் நேரில் வந்து துக்கம் விசாரித்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி, பிப்ரவரி 24-ம் தேதி இரவில் துபாயில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக துபாய் போலீஸார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சுய உணர்வற்ற நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலின் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார்’ என கூறப்பட்டிருக்கிறது.

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு, ‘ஆக்சிடென்டல் டிரவுனிங்’ (எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்குதல்) காரணம் என துபாய் தடயவியல் துறை அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. போஸ்ட்மார்டம் அறிக்கையில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் (மது) கலந்திருந்ததாக கூறப்பட்டிருக்கிறது.

ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் அவரது உடல் வருகைக்காக மும்பை மாநகரம் காத்திருக்கிறது. இதன் LIVE UPDATES

இரவு 07.10 : துபாய் விமான நிலையத்திலிருந்து, ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டது.

இரவு 07.00 : ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் நாளை காலை 9.30 முதல் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அந்தேரி மேற்கு செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

மாலை 06.40 : மும்பையின் வில்லேபார்லே மயானத்தில் நாளை பிற்பகல் 03.30 மணிக்கு ஸ்ரீதேவிக்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு  நடைபெறுகிறது.

மாலை 06.10 : ஸ்ரீதேவியின் சொந்த ஊரான சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.

மாலை 05.45 : நடிகை ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டதற்கான சான்றிதழ்.

மாலை 05.05 : அனில் அம்பானியின் தனி விமானம் மூலம், ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்படுகிறது.

மாலை 04.55 : நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாய் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாலை 4.30 : ஸ்ரீதேவியின் உடல் ‘எம்பால்மிங்’ செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போனி கபூர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீதேவியின் உடலை எடுத்துக் கொண்டு இந்தியா கொண்டு வருவதற்காக துபாய் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

மாலை 4.15 : ஸ்ரீதேவியின் மரண வழக்கில் மர்மங்கள் இல்லை என முடிவு செய்து துபாய் போலீஸ் முடித்து வைத்துவிட்டதாக இந்திய தூதரக அதிகாரி விபுல் கூறினார். ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வருவதற்கான தடைகள் நீங்கின. எம்பால்மிங் முடிந்து, இன்று மாலையே உடல் அங்கிருந்து விமானத்தில் எடுத்து வரப்படும் என தெரிகிறது.

பகல் 2.30 : நடிகை ஸ்ரீதேவியின் உடல், துபாயில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சுபாஜித் ராய் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல அனுமதி கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கணவர் போனிகபூரிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.

பகல் 2.00 : ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியம்சுவாமி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பகல் 1.15 : ஏற்கனவே வெளியான தடயவியல் அறிக்கையில், ‘ஆக்சிடெண்டல் டிரவுனிங்’ என குறிப்பிட்டது சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது. அதாவது, ‘டிரவுனிங்’ (நீரில் மூழ்கி இறப்பது) என்பதை மட்டும்தான் தடயவியல் சோதனை மூலமாக கூற முடியும். அது ஆக்சிடெண்டலா? (எதிர்பாராத விதமாக நடந்ததா?), திட்டமிடப்பட்டதா? என்பதை விசாரணை அமைப்புகள்தான் முடிவு செய்ய வேண்டும். தவிர, டிரவுனிங் என்பதையே ஆங்கிலத்தில் தவறான ‘ஸ்பெல்லிங்’கில் அந்த அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமே முந்தைய தடயவியல் சோதனை மீது சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

பகல் 1.00 : ஸ்ரீதேவி தலையின் பின் பக்கத்தில் காயம் இருப்பதாகவும், அது குறித்து துபாய் சட்டத்துறை உரிய விசாரணை நடத்துவதே தாமதத்திற்கான காரணம் என அங்கிருந்து தகவல்கள் வருகின்றன. தடயவியல் பரிசோதனையை புதிதாக ஒரு குழு அமைத்து மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

பகல் 12.00 : போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜூன் கபூர் இன்று காலையில் துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதில் உள்ள நடைமுறைகளை மேற்கொள்ள தனது தந்தைக்கு உதவ அவர் சென்றிருக்கிறார்.

பகல் 11.30 : ஸ்ரீதேவி மரண விவகாரத்தில் துபாய் போலீஸார் வழக்கமான நடைமுறைகளையே மேற்கொள்வதாகவும், தாமதப்படுத்தும் செயல்பாடு எதுவும் இல்லை என்றும் துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறினர்.

பகல் 11.00 : நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இசை மீட்டியிருக்கிறார். அதனை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

காலை 10.45 : ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையை துபாய் போலீஸார் ஏற்கனவே துபாய் சட்டப் பிரிவுக்கு மாற்றிவிட்டனர். அவர்கள் விசாரணையை முடித்து சான்றிதழ் கொடுத்த பிறகே, உடலை பதப்படுத்தும் ‘எம்பால்மிங்’ நடைமுறையை தொடங்க முடியும். அதற்காகவே துபாய் பிரேத பரிசோதனைக் கூடத்தில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீதேவியின் உடல் எப்போது மும்பை வந்து சேரும் என்பது இன்னும் உறுதி ஆகவில்லை. மேலும் தாமதம் ஆகிக்கொண்டே போகிறது.

காலை 10.10 : மும்பையில் அனில் கபூரின் இல்லத்தில் துக்கம் விசாரிக்க விஐபி.க்கள் வந்தபடி இருப்பதால், வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

காலை 10.00 : துபாயில் உள்ள முஹைஸ்னா யூனிட்டில் வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உடலை ‘எம்பால்மிங்’ செய்யும் நடைமுறை உண்டு. உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் எந்த நேரமும் எம்பால்மிங் நடைபெறும் என கலீஜ் டைம்ஸ் பத்திரிகை கூறியிருக்கிறது.

Sridevi Funeral LIVE UPDATES, Mumbai

துக்கம் விசாரிக்க வந்த ஷாருக்கான்

காலை 9.50 : ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தன்னைப் பற்றிய சுய விவரங்களை துபாய் போலீஸில் சமர்ப்பித்ததாகவும், அவரை விசாரணைக்கு போலீஸ் அழைத்ததாக கூறப்படுவது சரியல்ல என்றும் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை துபாய் காவல் நிலையத்திற்கு போனி கபூர் செல்லவில்லை.

Sridevi Funeral LIVE UPDATES, Mumbai

ஸ்ரீதேவியின் மைத்துனர் அனில் கபூர் இல்லத்திற்கு துக்கம் விசாரிக்க வந்த ரஜினிகாந்த்

காலை 9.45 : நேற்று மாலையில் நடிகர் கமல்ஹாசன் வருகை தந்து அனில் கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் உறவினர்களிடம் துக்கம் விசாரித்தார். இரவில் ரஜினிகாந்த், நடிகர் ஷாருக்கான் ஆகியோரும் வந்தனர்.

Sridevi Funeral LIVE UPDATES, Mumbai

நடிகர் கமல்ஹாசன்

காலை 9.30 : ஸ்ரீதேவியின் உடல் ‘எம்பால்மிங்’ செய்வதற்காக துபாயில் வைக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் அனில் கபூரின் இல்லத்திற்கு நேற்றே தொடர்ச்சியாக பிரபலங்கள் நேரில் வந்து துக்கம் விசாரித்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close