எஸ்.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செலவுகள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதால், தேர்வர்களிடமிருந்து அதிக தேர்வு கட்டணம் வசூலிக்க அந்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பெரும்பாலான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், தேர்வாணையத்தின் செலவுகள் ரூ.900 கோடியாக அதிகரித்துள்ளதால், தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து அதிக தேர்வு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2018-ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.சி. அனைத்து தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதல் பதவிகள் மத்திய அரசில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதிகளவிலான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்வாணையத்தின் வருமானம், அதன் செலவைவிட கால் பங்கு மட்டுமே உள்ளது. இந்த நிதியாண்டில், தேர்வாணையத்தின் செலவில் நான்கில் மூன்று பங்கு, அதாவது ரூ.300 கோடி செலவை சந்திக்கும். இந்த செலவு, அடுத்தாண்டில் ரூ.800 கோடியாக அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை சமாளிக்க தேர்வர்களின் விண்ணப்ப கட்டணம், தேர்வு கட்டணத்தை உயர்த்த நிதி அமைச்சகம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ்.நடத்தும் தேர்வுகளுக்கு தற்போது பொதுப்பிரிவு ஆண்களுக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பெண் தேர்வர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. அதேபோல், எஸ்.சி/எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவர்களின் வாரிசுகள் ஆகியோரிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
தேர்வுக்கான பொருட்கள், ஆதார் உறுதிபடுத்துதல், இணைய சேவை, உள்ளிட்ட செலவுகள் எஸ்.எஸ்.சி.க்கு உள்ளன. 30-40 சதவீத தேர்வர்கள் விருப்பமின்றி இத்தேர்வுகளை எதிர்கொண்டாலும், அவர்களுக்கும் எஸ்.எஸ்.சி. செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், உண்மையிலேயே பணியை பெற உழைக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள் என எஸ்.எஸ்.சி. கருதுகிறது.