புது டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் நடைமேடைகளான 14 மற்றும் 15-ல் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக, இரவு சுமார் 9:55 மணிக்கு முதல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 15 feared dead in stampede at Delhi railway station amid Maha Kumbh rush
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள், டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்தின் காரணமாக 15 பேர் உயிரிழந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். எனினும், உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் இறுதிப் பட்டியல் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில், "டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து குறித்து அறிந்து துயரமுற்றேன். தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களைக் சுற்றியே என் எண்ணம் இருக்கிறது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்" என மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "புது டெல்லி ரயில் நிலையத்தில் இத்தகைய விபத்து நடந்தது குறித்து செய்தியறிந்தேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்து வேதனையடைகிறேன்" என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
"சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க, நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசல் தற்போது குறைந்துள்ளது" என யில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "புது தில்லி ரயில் நிலையத்தில் நேற்று (பிப் 15) இரவு 9.30 மணியளவில் பிளாட்பாரம் 13 மற்றும் 14க்கு அருகே வரலாறு காணாத நெரிசல் ஏற்பட்டது. திடீரென பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், சிலர் மயங்கி விழுந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், நடைமேடை 14 இல் இருந்தபோது, ஏராளமான மக்கள் திரண்டனர். சுதந்திரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதம் ஆகின. இதனால், காத்திருந்த பயணிகள் பலர் 12, 13 மற்றும் 14 ஆகிய நடைமேடைகளில் இருந்தனர். எங்கள் தகவல்களின்படி, 1,500 பொது டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதனால் தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. நடைமேடை 14 மற்றும் நடைமேடை 1 அருகேயுள்ள எஸ்கலேட்டர் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது" என ரயில்வே டி.சி.பி மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுவது தெரிந்தும், எதற்காக பல ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை எனறு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரயில் நிலையத்தில் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
- Sakshi Chand , Ankita Upadhyay