தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட ஒமிக்ரான் என்னும் புதிய வகை கொரோனா, பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து, அங்கிருந்து வரும் பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகள் விதித்துள்ளன. இந்தியாவும் புதிய வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களும் பாதுகாப்பை அம்சங்களை அதிகப்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு
மகாராஷ்டிரா
மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) இணைந்து கடந்த 15 நாட்களில் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆபத்தான நாடுகள் என கருதப்படும் பட்டியலில் இருந்து வந்த 465 பயணிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 95 பேர் மும்பையில் வசிப்பவர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், தற்போது தினசரி 65 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தி வரும் நிலையில், அதனை 1 லட்சமாக உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிக ஆபத்து என கருதப்படும் நாடுகளுக்கு பயணத் தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இத்தகைய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கொரோனா தொற்று உறுதியாகும் நபர்களை, அரசு கண்காணிப்பில் 10 நாள்கள் தனிமைப்படுத்தலில் வைக்க முடிவு செய்துள்ளோம். இத்தகைய கால கட்டத்திற்குள், பாதிப்பு உறுதியான நபர்களுக்கு புதிய வகை கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனை நடைபெறும்” என்றார்.
மத்திய பிரதேசம்
கடந்த மாதத்தில் மாநிலத்திற்கு வந்த சர்வதேச பயணிகளை கண்டறிந்து, அவர்களுக்கு சோதனை நடத்தப்படும். தேவைப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
அவர் கூறுகையில், ” 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால், ஆபத்தில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கிறோம். 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் பள்ளிகள் இயங்கும். ஆன்லைன் கல்வியும் தொடர்ந்து நடைபெறவுள்ளதால், பெற்றோர்கள் விருப்பத்தின்பேரில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம்” என்றார்.
உத்தரப் பிரதேசம்
லக்னோ நிர்வாகம் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு தனி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சர்வதேச முனையத்திற்கான வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அனைத்து பயணிகளும் 8 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தல் கடைசி நாளுக்குப் பிறகு மீண்டும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.
அதே சமயம், உள்நாட்டு பயணிகளுக்கு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில்,ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
குஜராத்
மாநில சுகாதாரத் துறை மனோஜ் அகர்வால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ” மத்திய சுகாதாரத் துறை உத்தரவு போலவே, நாங்களும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். ஆபத்தான நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரபணு வரிசைமுறை எனப்படும் ஜீனோம் சீக்வென்சிங் செய்யப்படுகிறது” என்றார்.
தெலுங்கானா
மாநில பொது சுகாதார இயக்குனர் ஜி சீனிவாச ராவ் கூறுகையில், ” மாநிலம் முழுவதும் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இரண்டு டோஸ் போட்டிருந்தாலும், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கும், ஒரு டோஸ் போட்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் தொற்று உறுதியாகுவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு வரிசைமுறை எனப்படும் ஜீனோம் சீக்வென்சிங் மூலம் வைரஸின் உருமாற்றங்களைக் கண்டறியும் பணி நடைபெறும்” என தெரிவித்தார்.
ஹரியானா
முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், கொரோனா கட்டுப்பாடுகள் மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், தளர்வுகளை அறிவிக்க கோரிக்கை வந்தவண்ணம் உள்ளது.ஆனால், புதிய வகை கொரோனா காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை” என்றார்.
காஷ்மீர்
விமானம், ரயில் அல்லது சாலை மூலம் ஜே&கே செல்லும் பயணிகளிடம் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால், ஆர்டி பிசிஆர் சோதனை செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil