பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ராகுல் காந்திக்கு "முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும்" என்று நகைச்சுவையாக பேசினார்.
அப்போது அவர், “ராகுல் காந்தி முன்பு எனது ஆலோசனையை பின்பற்றவில்லை. அவருக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும்.
எனினும் இன்னமும் காலதாமதம் ஆகவில்லை” என்றார். இதைக் கேட்ட ராகுல் சிரித்த முகத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து, லாலுவின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.
அப்போது ராகுல் காந்தி, “நீங்கள் சொல்லி விட்டீர்கள்.. நடக்கும்” என்றார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை (பாஜக) தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று ஒன்று கூடின.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காந்தி, “கூட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி எங்களுக்கு சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நெகிழ்வுத்தன்மையுடன் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். மேலும் எங்கள் சித்தாந்தத்தைப் பாதுகாக்க பாடுபடுவோம்” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிம்லாவில் அடுத்த கூட்ட அமர்வு நடக்கும். அப்போது, கூட்டணி முறைகள் இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து கார்கே, "நாங்கள் அந்தந்த மாநிலங்களில் பணிபுரியும் போது எப்படி ஒன்றாக முன்னேறுவது என்பது குறித்த நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்காக ஜூலை மாதம் சிம்லாவில் சந்திக்க உள்னோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“