மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் சனிக்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு வகுப்புவாத பதற்றம் நிலவுகிறது.
நகரின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 10 நாள் திருவிழாவின் ஒரு பகுதியாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சனிக்கிழமை இரவு நகரில் விநாயகர் சிலை நிறுவ எடுத்துச் சென்ற போது மோச்சிபுரா பகுதியில் முதல் கல் வீச்சு சம்பவம் நடந்தது.
காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் லோதா கூறுகையில், பந்தல் பகுதிக்கு அருகே கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதாகவும் அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் முதலில் காவல்துறைக்கு புகார் வந்தது. "இந்த வழக்கு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் லோதா கூறினார்.
மோச்சிபுரா பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் மீது கல் வீசிய அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 500 பேர் சனிக்கிழமை இரவு ஸ்டேஷன் ரோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரைப் பின்தொடர்ந்து கூட்டத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
அப்போது அங்கு மீண்டும் ஒரு கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த கல் வீச்சு சம்பவத்தில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது என்றார். எஸ்.பி மேலும் கூறுகையில், “கல் வீச்சு சம்பவத்தில் சிலைகள் எதுவும் சேதமாகவில்லை. கல் வீச்சில் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் விசாரித்து வருகிறோம். அதை உறுதிப்படுத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறோம், ”என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“