சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக வந்தே பாரத் அதிவரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தென் இந்தியாவில் இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயிலாகும். வாரத்தில் 6 நாட்கள் இரு மார்கங்களிலிருந்தும் இயக்கப்படுகிறது.
குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.25) சனிக்கிழமை வழக்கம்போல் சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் (20607) பயணிகளை ஏற்றி கொண்டு மைசூருவுக்கு புறப்பட்டது. காலை சுமார் 10.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம்- பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே சென்ற போது ரயில் மீது மர்மநபர்கள் கற்கள் வீசி தாக்கினர். இதில் 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவம் காலை 10.30 மணியளவில் நடந்துள்ளது. கல் வீசப்பட்டதில் ரயிலின் C4 மற்றும் C5 பெட்டிகளில் தலா ஒரு ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. பயணிகளுக்கு காயம் ஏற்படாததாலும், கண்ணாடிகள் முழுமையாக உடையவில்லை என்பதாலும் ரயில் நிறுத்தப்படவில்லை என்றார்.
மேலும் ரயில்வே இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது. ரயில்கள் உட்பட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது ரயில்வே சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் ஆகும் என்று கூறினார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.
வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு நடப்பது இது முதல் முறை அல்ல. இதே ரயிலின் மீது பங்கார்பேட்டை- கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த காலங்களில் கற்கள் வீசப்பட்டன. விசாகப்பட்டினம்- செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீதும் கற்கள் வீசப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil