கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற இருந்த புத்தாண்டு தின நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வொயிட் ஆர்கிட் கன்வென்ஷன் மையத்தில், புத்தாண்டை முன்னிட்டு, வரும் 31-ஆம் தேதி சன்னி லியோன் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சன்னி லியோன் நடன நிகழ்ச்சி நடைபெற்றால் கலாச்சாரம் பாதிக்கும் என, கன்னட அமைப்புகள் சில தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, கர்நாடக ரக்ஷனா வேதிகே யுவ சேனே அமைப்பினர், நேற்று வொயிட் ஆர்கிட் முன்பு சன்னி லியோன் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்நிகழ்ச்சி நடைபெற்றால் தற்கொலை செய்துகொள்வோம் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி அந்நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து, யுவ சேனே அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவர் கூறுகையில், “இந்நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். புத்தாண்டு பார்ட்டிக்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், அதில் சன்னி லியோன் கலந்துக்கொள்ள கூடாது. கடந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர்”, என கூறினார்.
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், பெண்களுடனும், குடும்பமாகவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் சன்னி லியோன் தவிர்த்து புகழ்பெற்ற டி.ஜே.க்களும் கலந்துகொள்ள இருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.2,999 முதல் ரூ.7,999 வரை பல பிரிவுகளில் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.