இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து பாடம் படிக்க வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா நிதி நிலவரம் குறித்து பேசினார். இதற்கு காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது குறித்து பேசிய திமுக எம்பி டிஆர் பாலு, டிஆர்எஸ் எம்பி கேசவ் ராவ் ஆகியோர் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்துதான் பேசவந்துள்ளோம். ஆனால் மத்திய அரசு நிதி நெருக்கடியை மாநிலங்கள் மேல் சுமத்த பார்க்கிறது எனக் குற்றஞ்சாட்டினார்கள்.
முன்னதாக பந்தேல்கண்ட் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, வாக்குக்காக இலவசங்களை அள்ளி வீசும் கலாசாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார்.
இதனை தீங்கிழைவிக்கும் ஆபத்தான கலாசாரம் என்று வர்ணித்திருந்தார். இந்த நிலையில் இதே கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது, இலவசங்கள் நமது பொருளாதாரத்தை பாதிக்கும். நாட்டில் ஆரோக்கியமான பொருளாதாரம் அவசியம். ஆகவே இதனை நோக்கி நாம் நகர வேண்டும். இதுவே இலங்கை பொருளாதார நெருக்கடி நமக்கு அளிக்கும் ஆகச்சிறந்த பாடம் ஆகும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் மக்களவை எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோரும் இலங்கை பிரச்சினை பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இந்தக் கூட்டம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சௌகதா ராய், ‘இலங்கையின் கடன் நிலை குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. அப்போது இலங்கைக்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட விவரங்களை அவர்கள் கொடுத்தார்கள். அப்போது இந்த விவகாரத்தில் முன்னரே அரசு ஏன் தலையிடவில்லை என்று கேட்டேன். அப்போது இலங்கைக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது. இலங்கை ஓர் இறையாண்மையுள்ள நாடு. அவர்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றனர் என்றார். தொடர்ந்து மாநிலங்களின் நிதி நிலைமை குறித்து பேசியபோது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை சுட்டிக் காட்டினார்கள் என்றார்.
இது குறித்து டிஆர்எஸ் எம்பி., ராவ் கூறுகையில், ‘கடன் எல்லையை தாண்டவில்லை. நாட்டின் நிதி நெருக்கடியை மாநில அரசு மீது சுமத்தும் திட்டம் இது’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அதிமுக தம்பிதுரை, தேசிய மாநாட்டுக் கட்சி பரூக் அப்துல்லா, ஆம் ஆத்மி சஞ்சய் சிங், பகுஜன் சமாஜ் ரிதேஷ் பாண்டே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விஜயாசாய் ரெட்டி, மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.