Advertisment

போலந்து எல்லையில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள்… புதிய பாதையை திட்டமிடும் இந்தியா

உக்ரைன் எல்லையில் உள்ள ஷெஹினியில் 10 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் இந்திய குடிமக்களை எல்லை வழியே போலந்திற்குள் அழைத்து செல்லும் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போலந்து எல்லையில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள்… புதிய பாதையை திட்டமிடும் இந்தியா

உக்ரைன் - போலந்து எல்லையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உறைபனியில் சிக்கித் தவிக்கும் நிலையில், உஸ்ஹோரோட் பகுதியிலிருந்து ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்-க்கு மாற்று ரயில் பாதையை அடையாளம் கண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், "போலந்து எல்லை வழியாக இந்தியர்களை வெளியேற்றுவது ஒரு "பிரச்சினைக்குரிய பகுதியாக" மாறியுள்ளது. உக்ரைன் குடிமக்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கானோர் அவ்வழியை பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.

உஸ்ஹோரோடுக்கு செல்ல திட்டம்

நம்மில் பலர் அங்கு நீண்ட நேரமாக சிக்கியுள்ளனர்.கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு என்ன வழிகாட்டுதல் வழங்கலாம் என்பது குறித்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறோம். போலந்திற்குள் மாணவர்கள் இருக்கும் இடம் வரை செல்ல முடியவில்லை என்றால், உஸ்ஹோரோடுக்கு செல்ல திட்டமிட்டிருக்கோம்.

அங்கிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஹங்கேரியின் புடாபெஸ்டுக்குப் புறப்படும் ஒரு ரயில் உள்ளது. இது, அங்கிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு விருப்ப திட்டமாகும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "வெளியேறும் நடைமுறைகள் உட்பட புடாபெஸ்டுக்கான பயண நேரம் ஏறக்குறைய ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆகிறது. அங்கிருக்கும் குடிமக்கள் குறிப்பாக மாணவர்களின் நலனை குறித்து இந்தியா கவலைக்கொள்வதை டெல்லியில் உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதரகம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடம் இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் குவிந்திருக்கும் இடங்களை பகிர்ந்து கொண்டேன். இரு தூதர்களும் எங்களின் கவலைகளை கவனத்தில் கொண்டு, இந்திய குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தனர்" என்றார்.

10 சிறப்பு பேருந்துகள்

வார்சாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், "உக்ரைன் எல்லையில் உள்ள ஷெஹினியில் 10 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் இந்திய குடிமக்களை எல்லை வழியே போலந்திற்குள் அழைத்து செல்லும்.

இன்று (28 பிப்ரவரி 2022) முதல் செயல்பாட்டுக்கு வரும் பேருந்து சேவை, Krakowiec மற்றும் Budomierz ஆகிய எல்லை சோதனைசாவடி வாயிலாக போலந்தின் Rszeszow இல் உள்ள தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகள் அழைத்து செல்லப்படுவீர்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் மாணவர்கள் தவிப்பு

இதற்கிடையில், அங்கு சிக்கியிருக்கும் மாணவர்கள் பலரை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டு பேசியது. அவர்கள், உக்ரைனையும் போலந்தையும் பிரிக்கும் ஷெஹினி-மெடிகா எல்லை சோதனைச் சாவடியில் 48 மணி நேரத்திற்கும் மேலாக வெயிட் செய்வதாகவும், எந்தவித அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு இந்திய தூதரகத்திடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

30 கிமீ நடந்து வந்த மாணவர்கள்

எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள எல்விவ் நகரைச் சேர்ந்த முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் பேசுகையில், " எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நானும் எனது உறவினரும் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 30 கிமீ நடந்தே எல்லையை அடைந்தோம். சுமார் 48 மணி நேரமாக இங்கு காத்திருக்கிறோம். இதுவரை யாரும் உதவிக்கு வரவில்லை. இங்கு உட்காருவதற்கு கூட இடம் இல்லை.

எல்லையில் பாகுபாடு

உக்ரைனியர்கள் நிறைந்த வாகனம் வரும்போதெல்லாம், இந்தியர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். எல்லையில் இரண்டு இரவுகளை செலவிட்ட நிலையில், தற்போது அங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளூர்வாசிகள் ஏற்பாடு செய்த இடத்தில் தங்கியுள்ளோம். இந்திய தூதரகத்திடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை" என்றார்.

முன்னர், வார்சாவில் (போலந்து) உள்ள இந்தியத் தூதரகம் வழங்கிய அறிவுரையில், வெளியேற விரும்பும் மாணவர்களை நடைபாதை அல்லது பேருந்து/டாக்ஸி மூலம் ஷெஹினி-மெடிகா எல்லையை அடையுமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் எல்லைப் படைகள் பாகுபாடு காட்டப்படுவதாக எல்லையில் சிக்கியுள்ள பல மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

சனிக்கிழமை மாலை எல்லையை அடைந்த டெர்னோபிலைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் கூறுகையில், "இந்திய மாணவர்கள் பல வரிசைகளில் காத்திருக்கின்றனர். ஆனால், போலந்து அதிகாரிகள் எங்கள் பாஸ்போர்ட்டில் எல்லையை கடப்பதற்கான அனுமதி முத்திரையை போடவில்லை. மாறாக, உக்ரைனியர்களை கடக்க மட்டுமே அனுமதிக்கிறார்கள். இந்திய தூதரக அதிகாரிகள் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. எங்கே போவது? என" கேள்வி எழுப்பினார்.

மற்றொரு மாணவர் கூறுகையில், "பெரும்பாலான மாணவர்கள் இரவு முழுவதும் பொது இடத்திலும், பூங்காக்களிலும், சாலைகளிலும் தூங்கினர். சிலருக்கு உள்ளூர் உக்ரைனியர்கள் தங்குமிடம் கொடுத்தனர். மீட்க யாரும் வராததால், சனிக்கிழமை போலந்து எல்லையை அடைந்த சில மாணவர்கள் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளனர்" என்றார்.

விசா இல்லாமல் இந்தியர்கள் வரலாம் - போலாந்து

உக்ரைனியர்கள் மட்டுமே கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று மாணவர்கள் குற்றச்சாட்டிய நிலையில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து இந்திய மாணவர்களையும் எந்தவித விசாவும் இல்லாமல் போலந்திற்குள் நுழைய அனுமதிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் அகதிகளாக போலந்தில் ஏற்கனவே தஞ்சம் அடைந்துள்ளனர். எவ்வித பாகுபாடும் பார்க்கப்படுவது இல்லை என போலந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் வெளியுறவுச் செயலர் ஷ்ரிங்லா கூறுகையில், கார்கிவ், சுமா மற்றும் ஒடெசா போன்ற நகரங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்தியா தீவிர முயற்சி

தங்குமிடம் மற்றும் போக்குவரத்தை ஏற்பாடு செய்வதற்கும் வெளியேறும் வழிகளை வரைவதற்கும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து கிழக்கு உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்கு அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளது . கிவ்வில், குறைந்தது 2,000 இந்திய குடிமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்" என்றார்.

அதேவேளையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், உக்ரைன்-மால்டோவா எல்லையில் உள்ள இந்தியர்களை நுழைவதற்கு ஆதரவு கோரி மால்டோவாவின் வெளியுறவு அமைச்சரிடம் பேசினார்.

இதற்கிடையில், ஜெனிவாவில் உள்ள சர்வதேச ரெட் கிராஸ் அமைப்பிடம் அரசாங்கம் உதவி கேட்டு சென்றுள்ளதாக ஷ்ரிங்லா கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Russia Ukraine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment