புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்றிரவு (மார்ச் 21) தனது நண்பருடன் சாப்பிட ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள உணவகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் காவலரின் வாகனத்தை இடிப்பதுபோல் வந்து நின்றுள்ளது.
அப்போது, சப்- இன்ஸ்பெக்டர், காரை ஓட்டி வந்தவரிடம் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்? என்று கேட்டுள்ளார். அப்போது காரில் இருந்த ஓட்டுநர் உட்பட 2 பேர் சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட பொதுமக்கள், சப்- இன்ஸ்பெக்டரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை வலை வீசித் தேடி வருகின்றனர். இதனிடையே, போதையில் தகராறில் ஈடுபட்டவரின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அதில் ஒருவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் அரசியல் புள்ளியின் மகன் என்றும் கூறப்படுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி