அமெரிக்கா அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்காவாழ் இந்தியரான சுதர்சன் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய எரிசக்தி அறிவியல் ஆய்வு மையமாக விளங்கும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் பணி புரிந்து வரும் சுதர்சனம் பாபு, தேசிய அறிவியல் வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக 6 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் இளநிலைப் பட்டமும், 1998ம் ஆண்டு, ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் எம்.டெக் முதுகலைப் பட்டமும் சுதர்சன் பாபு பெற்றார். சேதுராமன் பஞ்சநாதன், சுரேஷ் வி.கரிமெல்லா ஆகிய இரண்டு முன்னாள் ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர்களும், அமெரிக்கா தேசிய அறிவியல் வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே கல்வி நிறுவனத்தில் இருந்து மூன்று முன்னாள் மாணவர்கள், பல்வேறு காலங்களில், மிகவும் மதிப்புடை தேசிய அறிவியல் வாரியத்தில் உயர்நிலை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது, ஐ.ஐ.டி மெட்ராஸின் கல்வி சூழலை இந்த உலகத்திற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
தேசிய அறிவியல் வாரியம் என்றால் என்ன ?
1950ம் ஆண்டு அமெரிக்கா காங்கிரசால் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன நடுவணரசு நிறுவனமாக தேசிய அறிவியல் அறக்கட்டளை விளங்கி வருகிறது.
அமெரிக்கா கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட நடுவண் அரசு மானியங்கள் பெறும் அடிப்படை ஆராய்ச்சிகளில், சுமார் 24 சதவீதத்திற்கான நிதி ஆதாரமாக தேசிய அறிவியல் அறக்கட்டளை இருக்கிறது. கணிதம், கணினி அறிவியல், சமூக அறிவியல் போன்ற பல துறைகளில், அமெரிக்கா நடுவண் அரசு உதவி கிடைக்கும் ஆராய்ச்சிகளில் முக்கிய பங்காக தேசிய அறிவியல் அறக்கட்டளை உள்ளது. 2019-ம் ஆண்டில் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய அறிவியல் அறக்கட்டளையின் ஒட்டுமொத்த கொள்கைகளை செயல் திட்டமாக்க 24 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அறிவியல் வாரியம் (என்.எஸ்.பி) செயல்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.