கடந்த ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சுதீக்ஷா ( Sudeeksha Bhati), பேப்சன் கல்லூரியின் ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் அமெரிக்காவில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்களன்று உத்தர பிரேதேசம் புலந்த்ஷாஹர் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுதீக்ஷா பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் ஒருவரின் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில், மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் தேவையில்லாத வார்த்தை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சுதீக்ஷா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா , 12ம் வகுப்புத் தேர்வில் மானுடவியல் துறையில் 98% மதிப்பெண்களை எடுத்திருந்தார். மாசசூசெட்ஸில் உள்ள பாப்சன் கல்லூரியில் தொழில் முனைவோர் படிப்பைத் தொடர முழு உதவித்தொகை இவருக்கு கிடைத்தது. கடந்த மார்ச் 13 அன்று, இந்தியாவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியிருந்தார்.
குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், வழக்கை முழுமையாக ஆராயவும், ஒரு டிஎஸ்பி மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக யுபி போலீசார் தெரிவித்தனர்.
சுதீக்ஷாவின் தந்தை ஜிதேந்திராவின் கூற்றுப்படி, "மாதவ்கர்-ல் உள்ள தனது பாட்டியைச் சந்திக்க, உறவினர் நிகாம் மற்றும் மாமாவுடன் கிளம்பினர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்கு முன், தனது உறவினர்கள் அனைவரையும் சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார்," என்று தெரிவித்தார்.
"நாங்கள் புலந்த்ஷாஹர் நகரைக் கடந்து, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எங்களை இருவர் பின் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில், எங்கள் பாதையில் முன்னும் பின்னுமாக குறுக்கே வந்து, பிரேக்கை அழுத்தின. அதற்கு, ஈடு கொடுக்கும் வகையில் நானும், பிரேக்கை அழுத்தினேன். பின்னால் அமர்ந்திருந்த சுதீக்ஷா பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் மோசமான காயம் எற்பட்டது”என்று பைக்கை ஒட்டிய சுதீக்ஷாவின் மாமா சத்யேந்தர் தெரிவித்தார்.
பைக்கில் அமர்ந்திருந்த சுதீக்ஷாவின் உறவினர் நிகாம் (16) கூறுகையில்“ அரை மணி நேரத்திற்குப் பிறகு தான் ஆம்புலன்ஸ் வந்தது. நாங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தோம். அங்கு, சுதீக்ஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டோம். விபத்து நடந்தவுடன் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சுதீக்ஷா வந்த பைக்கில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக முதற்கட்ட விசாரணையிலும், நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்களும் தெரிவிக்கின்றன.
புலந்த்ஷாஹர் நகர் எஸ். பி அதுல் குமார் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில்“ இவர்கள் சென்ற வாகனத்தின் முன், ஒரு மோட்டார் சைக்கிள் திடிரேனே பிரேக் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது விபத்துக்கும் வழிவகுத்தது இருவரும் உறவினரின் இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படும் ” என்று தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை வரை, இந்த வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
“வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அவுரங்காபாத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் விபத்து நடந்துள்ளது. அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டை நாங்கள் விசாரித்து வருகிறோம். உண்மைகள் வெளிவரும் போது, நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று புலந்த்ஷாஹர் டி.எம். ரவீந்திர குமார் கூறினார்.
இதற்கிடையில், இந்த வழக்கின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க கோரி, தேசிய பெண்கள் ஆணையம், உத்தர பிரேதேச டிஜிபி ஹிடேஷ் அவஸ்திக்கு கடிதம் எழுதியது.
“சம்பவம் நடந்தபோது நான் சுமார் 25 மீட்டர் தொலைவில் இருந்தேன். இவர்கள் முன்னாள் சென்ற புல்லட் வாகனம், வழியில் திடீரென்று நின்றது. பின்னால், பைக் ஓட்டி வந்த நபர் வேறு வழியில்லாமல் பிரேக்கை அழுத்தினார். நிலை தடுமாறிய சிறுமி, சாலையில் விழுந்தார், ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத சாட்சி தெரிவித்தது
"தாய் நாடு திரும்பியதிலிருந்து, எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வந்தார். அதே நேரத்தில் தனது சொந்த ஆன்லைன் வகுப்புகளையும் தொடர்ந்து வந்தார். மூன்று சகோதரிகளுக்கும், இரண்டு சகோதரர்களுக்கும் பெரிய முன்மாதிரியாக விளங்கினார். இந்த கிராமத்தில், உயர் படிப்புகளுக்காக வெளிநாடு சென்ற முதல் நபர் இவர்தான் ”என்று அவரது தாயார் கீதா (40) வேதனையடைந்தார்.
அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது ஐபிசி பிரிவு 304 ஏ (அலட்சியத்தால் ஏற்படும் மரணம்), 279 (அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவுரங்காபாத் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, சுதீக்ஷா சென்ற வாகனத்தை புல்லட் பைக் ஒன்று முந்த முயன்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.