உச்சநீதிமன்றம், 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2009ம் ஆண்டிலேயேல ஆழ்துளை கிணறுகளில், குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில், தாமாக முன்வந்து விசாரணை நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் இன்னும் பேப்பர்களில் தான் உள்ளன. இதற்கு பின்னர், பல குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். கடைசியாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சுஜித் உயிரிழந்துள்ளார்.
2009ம் ஆண்டில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்று வந்தது. இந்த கடிதத்தை ஏற்று கொண்டு அவர், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார்.
2010 பிப்.,11 அன்று, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சவுகான், பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி சில வழிமுறைகளை வகுத்தது, அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் அனைத்து மாநில தலைமை செயலர்கள் மூலம் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள்
போர்வெல் அமைக்க வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்கு முன்பே அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
போர்வெல் போடும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமோ பதிவு செய்து முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
போர்வெல் போடும் இடத்தில் போர்வெல் போடும் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் தகவல்கள் அடங்கிய பலகை வைத்திருக்க வேண்டும்.
டிரில்லிங் செய்யும் போது அந்த இடத்தை சுற்றி வேலிகளும் தடுப்புகளும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
போர்வெல் பணிகள் முடிவடைந்தவுடன் ஆழ்துளை கிணறுகளை போல்ட் நெட்டுகள் கொண்டு மூட வேண்டும்.
பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் மணல், களிமண், கூழாங்கற்கள் ஆகியவற்றை கொட்ட வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் வகுத்த வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சோதனை செய்ய வேண்டும்.
ஆழ்துளை கிணறுகளின் நிலை, டியூப்வெல்கள் தோண்டியது, எத்தனை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது, எத்தனை பயன்படுத்தப்படாமல் உள்ளது, திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் எத்தனை, சரிவர மூடப்படாத கிணறுகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து மாவட்ட, தாலுக்கா, கிராம அளவில் தகவல்களை பராமரிக்க வேண்டும்.
கைவிடப்பட்ட கிணறுகள் உள்ள இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரோ ஊரக வளர்ச்சி அலுவலரோ பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.