பொதுவெளியில் ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததால், பிரபல யூடியூபர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Beer Biceps என்ற யூடியூப் சேனம் மூலம் பிரபலமானவர் ரன்வீர் அல்லாபடியா. இவர் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரை நேர்காணல் எடுத்து புகழ் வெளிச்சம் அடைந்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு சிறந்த 'disruptor' என்ற விருதை பிரதமர் மோடியிடமிருந்து இவர் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், யூடியூபர் ரன்வீர் அல்லாபடியா தனது அருவெறுக்கத்தக்க பேச்சுக்களால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா உள்ளிட்ட சிலர் இணைந்து நடத்தும் "இந்தியாஸ் காட் லேட்டண்ட்" என்னும் நிகழ்ச்சியில் ரன்வீர் அல்லாபடியா சமீபத்தில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் போது, போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்க்க விரும்புவீர்களா? அல்லது அதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என நீங்கள் நினைப்பீர்களா?" என்று ஆபாசமாக கேள்வி எழுப்பினார். அப்போது, அருகில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
ஆனால், ரன்வீர் அல்லாபடியாவின் இந்தக் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இது போன்று ஆபாசமாக பொதுவெளியில் பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. ஆனால், கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைக் கடந்து யாராவது செயல்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தன்னுடைய ஆபாச கருத்துக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை ரன்வீர் அல்லாபடியா வெளியிட்டுருந்தார். ஆனால், அவரது செயலுக்கு அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் ரன்வீர் அல்லாபடியாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ரன்வீர் அல்லாபடியாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், மும்பை போலீசார் இது குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனினும், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான அஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஷ்ரா ஆகியோர் மும்பை காவல்துறை, தேசிய மற்றும் மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளனர்.