India News: தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் ஏற்கனவே செய்தி சேனல்களை இணைந்து நடத்தி வரும் நிலையில், பாஜக சமீபத்தில் செய்தி சேனல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இங்கு மிகவும் பிரபலமான சன் டி.வி திமுக எம்.பி தயாநிதி மாறனின் மூத்த சகோதரர் கலாநிதிக்கு சொந்தமானது. திமுக நேரடியாக கலைஞர் செய்தி சேனலை நடத்துகிறது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை இயக்குகிறது. அதன் செய்தி பிரிவு சேனல் தான் ஜெயா பிளஸ். 2017ல் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ஜெயா டிவியின் கட்டுப்பாட்டை அதிமுக தலைமையால் கைப்பற்ற முடியாமல் போனபோது. அதனால் தான் நியூஸ் ஜெ செய்தி சேனல் நிறுவப்பட்டது. மூத்த கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி தங்கபாலுவால் தொடங்கப்பட்டது தான் காங்கிரஸின் சேனலான மெகா 24.
ஆனால், அரசியல் கட்சிகள் அல்லது அதன் தலைவர்கள் செய்தி சேனல்களை வைத்திருக்கும் அல்லது அவர்களுடன் தொடர்புடைய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் அல்ல. இந்த பட்டியலில் இன்னும் சில மாநிலங்களும் உள்ளன.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனமான இந்திரா டெலிவிஷன் லிமிடெட் தெலுங்கு டிவி சேனலான சாக்ஷி டி.வி-யை மார்ச் 2009ல் தொடங்கியது. இந்த நிறுவனம் தற்போது ஜெகன் மோகனின் மனைவி ஒய் எஸ் பாரதி ரெட்டியால் நடத்தப்படுகிறது.
மார்ச் 2008ல் சாக்ஷி என்ற தெலுங்கு நாளிதழ் தொடங்கப்பட்ட ஜெகதி பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் உட்பட சாக்ஷி குழுமத்தில் பல்வேறு நிறுவனங்கள் செய்த முதலீடுகள் லஞ்சம் என்று சிபிஐ மார்ச் 2012ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. முன்னாள் முதல்வரும் ஜெகன் மோகனின் தந்தையுமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசாங்கத்திடம் இருந்து பலன்களைப் பெற்றவர்களால் இந்த பணம் "குயிட் ப்ரோகோ (ஏதோவொன்றிற்கு ஈடாக வழங்கப்படும் ஒரு உதவி அல்லது நன்மை) ஏற்பாட்டில்" இருந்ததாக சிபிஐ கூறியது.
ஹரியானா
ராஜ்யசபா எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான வேனோத் சர்மாவின் மகனுமான கார்த்திகேய சர்மா, 2007 முதல் ஐ டி.வி (iTV) நெட்வொர்க்கை நிறுவி அதன் மூலம் பல்வேறு செய்தி சேனல்களை நடத்தி வருகிறார்.
தொழிலதிபர் மற்றும் ஊடக உரிமையாளரான கார்த்திகேய ஷர்மா கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் இருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். பாஜக மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) ஆளும் கூட்டணியின் ஆதரவுடன், காங்கிரஸின் மூத்த தலைவரான அஜய் மக்கனை தோற்கடித்து மேல்-சபைக்கு தேர்வானார்.
ஐ டி.வி நெட்வொர்க் நியூஸ்எக்ஸ் (NewsX) என்ற ஆங்கில செய்தி சேனலுக்கு நடத்துகிறது. அதன் பிராந்திய பிரிவுகளான இந்தியா நியூஸ் ஹரியானா, இந்தியா நியூஸ் மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர், இந்தியா நியூஸ் பஞ்சாப் மற்றும் இந்தியா நியூஸ் உத்தரப் பிரதேசம்-உத்தரகாண்ட் ஆகியவை இந்தி பேசும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நெட்வொர்க்கிற்கு மூன்று தேசிய செய்தி சேனல்கள், இரண்டு செய்தித்தாள்கள், ஐந்து பிராந்திய செய்தி சேனல்கள் மற்றும் மொத்தம் இரண்டு ஆன்லைன் போர்டல்கள் (இணையதள செய்தி பிரிவு) உள்ளன. இந்த நிறுவங்களின் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குர்கான், டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல ஐந்து நட்சத்திர (ஃபைவ் ஸ்டார்) ஹோட்டல்களிலும் கார்த்திகேயாவுக்கு பங்குகள் உள்ளன.
2021ல், அவரது தந்தை ஹரியானா ஜன் சேத்னா கட்சியைத் தொடங்கினார். பாரதிய ஜனதாவில் சேருவதற்கு முன்பு கார்த்திகேயா அதன் உறுப்பினராக இருந்தார். அவர் ஹரியானா மாநில முன்னாள் சபாநாயகர் குல்தீப் சர்மாவின் மகள் ஐஸ்வர்யா சர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா
சுவர்ணா நியூஸ், கஸ்தூரி நியூஸ் 24 மற்றும் திக்விஜய் நியூஸ் ஆகியவை கர்நாடக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான அல்லது தொடர்புடைய செய்தி சேனல்களில் அடங்கும்.
சுவர்ணா, மாநிலத்தில் இரண்டாவது 24×7 செய்தி சேனல் ஆகும். இது 2008ல் தொடங்கப்பட்டது. இது ஜூபிடர் கேபிடல் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஜூபிடர் கேபிட்டலின் பெரும்பான்மை பங்குதாரர் ஆவார்.
சந்திரசேகர் ரிபப்ளிக் டி.வி-யிலும் முதலீடு செய்திருந்தார். ஆனால் 2018ல் பாஜகவில் சேர்ந்த பிறகு செய்தி சேனலை நடத்தும் ஏ ஆர் ஜி அவுட்லியர் ஏசியாநெட் நியூஸ் பிரைவேட் லிமிடெட் (ARG Outlier Asianet News Private Limited) இன் வாரிய இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். 2019 ஆம் ஆண்டில், ஏசியாநெட் ரிபப்ளிக் டிவியில் அதன் பங்குகளை குறைத்து கொண்டு சிறிய பங்குதாரராக மாறியது.
2011ல் தொடங்கப்பட்ட கஸ்தூரி நியூஸ் 24, முன்னாள் முதல்வர் எச் டி குமாரசாமியின் மனைவியும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்எல்ஏ-வுமான அனிதா குமாரசாமிக்கு சொந்தமானது. பொழுதுபோக்கு சேனலான கஸ்தூரி டிவிக்குப் பிறகு அனிதாவின் இரண்டாவது சேனல் இதுவாகும்.
தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் சேனல் தான் திக்விஜய் நியூஸ். 1990களில் பிஜேபியில் இருந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கேஷ்வர், 2014ல் மீண்டும் கட்சியில் சேருவதற்கு முன்பு சிறிது காலத்திற்கு முன்பு கட்சியை விட்டு விலகினார். விஜயவாணி என்ற கன்னட நாளிதழையும் அவர் நடத்தி வருகிறார்.
ஒடிசா
ஒடிசாவில் எந்த அரசியல் கட்சியும் நேரடியாக டிவி சேனலை நடத்தவில்லை என்றாலும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏக்கள் சஞ்சிப் குமார் மல்லிக் மற்றும் சுசாந்த் குமார் ரௌத் ஆகியோர் அரசாங்க சார்பு சேனலான நந்திகோஷா டிவியை இயக்கும் சகலா மீடியா பிரைவேட் லிமிடெட் குழுவில் உள்ளனர்.
பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா மனைவி ஜகி மங்கட் பாண்டா, ஒடிசா டிவி (OTV) என்ற பிரபல சேனலை நடத்தி வருகிறார்.
கேரளா
பிரபல சேனலான ஜெய்ஹிந்த் டிவி சேனல் மாநில காங்கிரஸால் ஆதரிக்கப்படுகிறது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா சேனலின் உரிமையாளரான பாரத் பிராட்காஸ்டிங் நெட்வொர்க் லிமிடெட்டின் தலைவராக பணியாற்றுகிறார்.
கைரளி டிவி மற்றும் மக்கள் தொலைக்காட்சி ஆகியவை CPI(M) ஆதரவைக் கொண்ட மலையாள கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பகுதியை கட்சித் தலைவர்கள் வைத்திருக்கிறார்கள். மாநிலத்தின் மீடியாஸ்கேப்பில் சமீபத்தில் நுழைந்த சேனல் தான் ஜனம் டிவி. இதை சங்பரிவார் அமைப்பு நடத்தி வருவதாக அறியப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவின் சேனல் “ஜனம் டிவியின் நீட்டிப்பாக இருக்கும். மேலும் தமிழ் சேனலின் பெயரும் பெரும்பாலும் அதேதான் இருக்கும்” என்று பிஜேபியின் உயர்மட்ட வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளனர்.
(இ என் எஸ் (ENS) சென்னை, ஹைதராபாத், சண்டிகர், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றின் உள்ளீடுகளுடன்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.