ரபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானம் வாங்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பிரான்ஸ் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்வு முன் இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதையடுத்து, மனு மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், "முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது ஒன்பது சதவிகிதம் குறைந்த விலையில் ரபேல் விமானம் ஒப்பந்தம் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் போடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை இல்லை" என்று கூறினார்.