உத்தரப்பிரதேசம், அலிகர் நகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்து தொடர்பான வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சுமார் 150 வருடங்களுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் 50% இட ஒதுக்கீட்டுடன் அதிகம் பயின்று வருகின்றனர். இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பின் அமர்வு விசாரணை செய்து வந்தது.
சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில் இந்த வழக்கின் முழு அமர்விற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமை வகித்தார். இவர் நவம்பர் 10 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சிறுபான்மை நிறுவனமாக இருக்க முடியாது என்ற அலகாபாத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்கிறது. இதில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அலிகர் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது ஆனால் நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அமர்வில் உள்ள மற்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து தலைமை நீதிபதி கூறும்போது, இவ்வழக்கில் 4 தனித்தனி தீர்ப்புகளும் 3 மாறுபட்ட தீர்ப்புகளும் உள்ளன. பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். அதன்படி நிறுவனத்துக்கு அந்தஸ்து வழங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய மற்றொரு அமர்வுக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பின் செல்லுபடியை தீர்மானிக்க புதிய அமர்வு அமைப்பதற்கு வழக்கின் நீதித்துறை பதிவுகளை தலைமை நீதிபதி முன் வைக்க வேண்டும் என மற்ற நீதிபகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“