எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
குற்றவழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அப்போது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடா்பான வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதனை குறைக்க எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம் என்று மத்திய அரசு அறிவுருத்தியிருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை வகுக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்க, 7.8 கோடி ரூபாய் செலவில், 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. எம்.பி.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்களும், எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குளை விசாரிக்க தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் 1581 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது அதிக அளவில் வழக்குகள் பதிவாகக்கூடிய மாநிலங்களாக கருதப்படும் தமிழகம், கா்நாடகா, பீகாா் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த நீதிமன்றங்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடா்பான வழக்குகளை மட்டும் விசாரிக்கும் என்றும், ஒரு வருட காலத்திற்குள் வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.