உச்சநீதிமன்ற சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ். மூலம் நீதித்துறையை பாஜக அரசு தாக்குவதாக காங்கிரஸ் சாடல்

”மூத்த நீதிபதிகள் மூலம் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பம். ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளது."

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலமாக நீதித்துறையை மத்திய பாஜக அரசு தாக்கிவருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி லோகூர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய் ஆகியோர், கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல புகார்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் “வருந்தத்தக்கது. பாஜக நீதித்துறையை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மூலம் தாக்குகிறது. மூத்த நீதிபதிகள் மூலம் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பம். ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளது.”, என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தை சந்தித்து தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதில் அரசியல் சதி இருப்பதாக, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஜே.நந்தகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு நந்தகுமார் அளித்த பேட்டியில், “ஊடகத்தை சந்தித்த 4 நீதிபதிகளில் ஒரு நீதிபதியின் வீட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா முன்பே சென்றிருக்கிறார். இதிலிருந்து, இச்சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது தெளிவாகிறது”, என கூறினார்.

மேலும், 4 நீதிபதிகள் செய்த செயல் மன்னிக்க முடியாதது எனவும், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர்கள் தாக்கிவிட்டதாகவும் கூறினார்.

×Close
×Close