தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோரை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (செவ்வாய் கிழமை) மதியம் சந்தித்து பேசினார். அவர்கள் எந்த விவகராங்கள் குறித்து பேசினர் என்ற செய்தி வெளியாகவில்லை. மேலும், நாளையும் (புதன்கிழமை) இரு தரப்பினரும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல புகார்களை ஊடகங்கள் முன்பு வெளிப்படுத்தினர். ”உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை. உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன”, என தெரிவித்திருந்தனர். மேலும், முக்கிய வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பிரச்சனைகள் உள்ளதாகவ்வும் அவர்கள் கூறினர். இவை குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் முறையிட்டும் அவை தீர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், அதனாலேயே ஊடகம் மூலம் மக்களிடம் இவற்றை தெரிவிக்க உந்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், தீபக் மிஸ்ராவுடன் நான்கு நீதிபதிகளும் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு தலைமை நீதிபதியே அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து நாளைய சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இன்னும் இந்த விவகாரம் முழுமையாக தீர்க்கப்படவில்லை என தெரிகிறது. இன்னும் 2-3 நாட்களுக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என நம்புவோம்”, என கூறினார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 பேர் அடங்கிய இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் விகாஸ் சிங் இரு தரப்பினரையும் சந்தித்து பேசினர். அப்போது, இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.