முக்கிய வழக்குகளின் விசாரணைகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய வழக்குகளை தொலைக்காட்சியில் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த கோரிக்கை வழக்காகவும் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், வழக்குகளை நேரலை செய்யும் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் செவி சாய்த்துள்ளது. மேலும், இதுகுறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வரும் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளனது.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டால் பிரத்யேகமாக டிவி சேனல் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக சில முக்கிய வழக்குகளை நேரலை செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளின் உண்மை நிலையை நாட்டு மக்கள் உடனுக்குடன் அறிய, இம்மாத இறுதிக்குள் வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில வழக்குகளின் விசாரணையை நேரலை செய்வதில் விலக்கு வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.