/indian-express-tamil/media/media_files/2025/08/22/stray-dogs-in-delhi-to-be-released-in-same-localities-after-vaccination-sc-modifies-aug-11-order-2025-08-22-11-22-26.jpg)
பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.
டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், நாய்க் கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்கை எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு டெல்லி அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் தெருநாய்களை பிடிப்பதற்கு யாராவது குறுக்கே நின்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்திய மனித உரிமைகள் மாநாடு என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது. அதில், தெருநாய்களின் பிறப்பை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்வதை கட்டாயமாக்கும் 2001-ம் ஆண்டின் விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனித உரிமைகள் மாநாட்டின் வக்கீல் ஆஜரானார். அதற்கு தலைமை நீதிபதி, ‘‘ஏற்கனவே வேறு ஒரு அமர்வு இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்துவிட்டது’’ என்று கூறினார். அதற்கு வக்கீல், தெருநாய்கள் தொடர்பான மனுக்களை கடந்த ஆண்டு மே மாதம் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு அந்தந்த உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியதை சுட்டிக்காட்டினார்.
தங்களது மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி, ‘‘கவனிக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். பின்னர் தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட புதிய அமர்வை தலைமை நீதிபதி அமைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு இன்று பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்படி, "டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும். ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும்.
டெல்லியில் பொதுஇடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்படுகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். வேறு இடங்களில் உணவு அளிப்போர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம். தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும். அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் உள்ள தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் தலைமைச் செயலாளர்கள் பதில் அளிக்க வேண்டும்." என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யும் நாய் ஆர்வலர்கள் ரூ.25 ஆயிரம், என்.ஜி.ஓ-க்கள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.