வாட்ஸ் அப்-பின் தகவல் பரிமாற்றத்திற்கான புதிய அந்தரங்க உரிமைக் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மத்திய அரசுக்கும் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தில் ஐரோப்பிய பயனர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கான அந்தரங்க உரிமையின் தரம் குறைவாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட புதிய மனுவில் உச்ச நீதிமன்றம் நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசும் வாட்ஸ் அப் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ்அப் தனது புதிய அந்தரங்க உரிமைக் கொள்கையை இந்தியாவில் அமல்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தரங்க உரிமை குறித்து மக்களுக்கு கடும் கவலைகள் இருப்5பதையும், பணத்தை விட குடிமக்களின் அந்தரங்க உரிமை முக்கியமானது என்பதையும் வலியுறுத்தியது. மக்கள் தங்கள் அந்தரங்க உரிமையை இழக்க நேரிடும் என்ற அச்சம் உள்ளது என்றும் அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, 2017ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள மனுவில் கர்மண்யா சிங் சரீன் தாக்கல் செய்த இடைக்கால விண்ணப்பத்தில் அரசு மற்றும் பேஸ்புக்கிற்கு சொந்தமான செயலிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பல ஆயிரம் கோடிக் கணக்கான ரூபாய் நிறுவன மதிப்பை விட மக்கள் தங்கள் அந்தரங்கத்தை அதிகம் மதிக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
தங்கள் பயனர்களின் தரவைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, சிறப்பு தரவு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் ஒரே அந்தரங்க உரிமைக் கொள்கை பொருந்தும் என்று உச்சநீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"