உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் அனுப்பிய கடிதம்! முழு விவரம்

இந்த முடிவுகள் தலைமை நீதிபதியின் தனிப்பட்ட முடிவுகளாக இருக்க வேண்டும். வேறு ஆதிக்க சக்திகளோ, மற்றவர்களின் தலையீடோ இதில் இருத்தல் கூடாது

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று, ‘உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை’ என்று ஊடகங்கள் முன்பு பரபரப்பு குற்றம்சாட்டினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகிப்பவர்கள் ஊடகத்தினரைச் சந்தித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை. நிர்வாகம் சரியில்லை. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்துப் பேசினோம். அதன்பிறகு உங்களைச் சந்திக்கிறோம். எங்கள் கவலைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் செய்தியாளர்களிடம் பேசுகிறோம்” என்றார்.

நீதிபதிகள் நால்வரும், உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் முழு விவரத்தை இங்கு காண்போம்,

“இந்த கடிதத்தை மிகவும் வேதனையுடனும், அக்கறை நோக்கத்திலும் உங்களுக்கு எழுதுகிறோம். உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட சில தீர்ப்புகள் நீதித்துறையின் ஒட்டுமொத்த முறையையும், ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மெட்ராஸ், கல்கத்தா, பாம்பே ஆகிய முக்கிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்ட தேதியில் இருந்து, நீதி நிர்வாகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளும் நிறுவப்பட்டுவிட்டது. இதுபோன்ற பாரம்பரியம் இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நூறு ஆண்டுகளாகியும் பின்பற்றி வருகிறோம்.

இந்த பாரம்பரியத்தில், இந்த மரபுகளில் மிகவும் முக்கியமான விதி என்பது, தலைமை நீதிபதி என்பவர் அனைவருக்கும், அனைத்து பென்ச்சுக்கும் தலைமையானவராக இருக்கிறார். தேவைப்படும் பொழுது வேறு அமர்வுக்கு வழக்குகளை அவர் மாற்றி தர முடியும்.

இந்த முடிவுகள் தலைமை நீதிபதியின் தனிப்பட்ட முடிவுகளாக இருக்க வேண்டும். வேறு ஆதிக்க சக்திகளோ, மற்றவர்களின் தலையீடோ இதில் இருத்தல் கூடாது. நாட்டின் சட்டக் கோட்பாட்டியலில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் அனைவருக்கும் முதன்மையானவர் என்றும், மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் தான் என்றும் தெளிவாக சொல்கிறது.

இதுபோன்று, ஒரு தனி அமர்வுக்கு வழக்கை ஒதுக்கும் போது, அந்த வழக்கை விசாரிக்கும் அளவுக்கு வலிமை கொண்ட அமர்வு எது என்பதை தலைமை நீதிபதி கவனிப்பது முக்கியம்.

மற்றொரு முக்கியமான விதி என்னவெனில், பல பேர் கொண்ட அமர்வில் இருப்பவர்கள், தங்களை மேதாவிகள் என்று நினைத்துக் கொண்டு, வழக்குகளை விசாரிக்க கூடாது. எந்த அமர்வு அதை விசாரிக்க வேண்டுமோ, அவர்கள் தான் குறிப்பிட்ட அந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

இதனால், நீதிமன்றத்தின் மீதுள்ள மதிப்பு கெட்டு விரும்பத்தகாத நிலை ஏற்படுவது மட்டுமில்லாமல், நம்பகத்தன்மையும் கரைந்துவிடும்.

மேலே கூறப்பட்ட இரண்டு விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சொல்ல நாங்கள் வருந்துகிறோம். பல வழக்குகள் எந்த அடிப்படையில் சில அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டது என தெரியவில்லை. இதில் எந்த நியாயமான முறையும் பின்பற்றவில்லை. இது போன்ற பல நிகழ்வுகளால் நீதிமன்றத்தின் நற்பெயர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தது.

சில வழக்குகளை மற்ற அமர்வுகளுக்கு மாற்றும் போது, எப்படி இந்த அமர்வால் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்க கடினமாக இருக்கும். Memorandum of Procedure என்பதை இறுதி செய்து, அதனை மார்ச் 2017ம் ஆண்டு இந்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அனுப்பி வைத்தார். இதற்கு பதில் ஏதும் அளிக்காமல், இந்திய அரசு மவுனமாக இருந்ததால், இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

ஜுலை 4, 2017ம் ஆண்டு, சி எஸ் கர்ணன் தொடர்பான வழக்கில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு முடிவு எடுக்கிறது. ஆனால், எங்களில் இருவர் அதனை எதிர்த்தோம். வழக்கை ஆராய்ந்து, நீதிபதிகள் நியமன வழக்கில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றோம். ஆனால், Memorandum of Procedure படி, அந்த ஏழு படித்த நீதிபதிகளும் வழக்கை ஆராயவில்லை.

Memorandum of Procedure தொடர்பாக எந்த பிரச்சனையாக இருந்தாலும், தலைமை நீதிபதியால் அது விவாதிக்கப்படும். அதுவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருக்குமெனில், ஒட்டுமொத்த அமர்வும் தான் அதை விசாரிக்க முடியும். தனியாக யாராலும் முடிவெடுக்க முடியாது.

மதிப்பிற்குரிய தலைமை நீதிபதி அவர்கள், இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகள் கண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொலீஜியத்துடன் தீவிரமாக ஆலோசித்தோ, தேவைப்பட்டால் நீதிபதிகளுடனோ ஆலோசித்தோ முடிவெடுக்க வேண்டும்” என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

×Close
×Close