எதிர்க்கட்சித் தலைவர்களின் அதிருப்தியை ஒடுக்க, மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ மற்றும் இ.டி.யை, மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, 14 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, உண்மைச் சூழல் இல்லாமல் பொதுவான உத்தரவுகளை வெளியிட முடியாது என்று கூறியது. “குறிப்பிட்ட உண்மைகள் இல்லாத நிலையில், நீதிமன்றத்தில் பொதுவான சட்டக் கொள்கையை வைப்பது ஆபத்தான கருத்தாகும்” என்று இந்த நீதிபதிகள் அமர்வு கூறியது.
காங்கிரஸ் தலைமையிலான அரசியல் கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, மனுவை விசாரிப்பதில் உச்ச நீதிமன்றம் தயக்கம் காட்டுவதை கவனத்தில் கொண்டு, மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார்.
“கற்றறிந்த வழக்கறிஞர் இந்த கட்டத்தில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோருகிறார். எனவே, மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
“உங்களிடம் தனிப்பட்ட கிரிமினல் வழக்கு அல்லது வழக்குகளின் குழு இருக்கும்போது தயவுசெய்து எங்களிடம் திரும்பி வாருங்கள்” என்று நீதிபதிகள் அமர்வு கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமையைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் விதமான குற்றவியல் செயல்முறைகளைப் பயன்படுத்துவது அபாயத்தை அதிகரிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன.
இந்த மனுவை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தி.மு.க, ஆர்.ஜே.டி, பி.ஆர்.எஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என்.சி.பி, சிவசேனா (யு.பி.டி), ஜே.எம்.எம், ஐக்கிய ஜனதா தளம், சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜே-கே தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் தாக்கல் செய்திருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“