அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கடத்தியதாக முன்னாள் கணவர் மீது புகார் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஓஹியோ நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற தீர்வு ஒப்பந்தத்தை மீறி தனது முன்னாள் கணவர் இரண்டு குழந்தைகளையும் கடத்தியுள்ளதாக பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மைனர் குழந்தைகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏஎம் கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ, தமிழக அரசு, மனுதாரரின் முன்னாள் கணவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரப்ஜித் ஜவுஹர், முன்னாள் கணவர் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாதபடி தனது இரண்டு மைனர் குழந்தைகளை கடத்தியதாகவும் கூறினார். மனுதாரர் தனது மைனர் மகளுக்கு அமெரிக்காவில் நிரந்த குடியுரிமை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மைனர் குழந்தைகள் சட்டவிரோதமாக மனுதாரரின் காவலில் இருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி முன்னாள் கணவரால் (தந்தையால்) நீதிமன்ற ஒப்பந்தத்தை மீறி கடத்தி செல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் ஓஹியோவின் கியஹோகா கவுண்டி முன் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்துள்ளனர்.
கடத்தப்பட்ட குழந்தைகள் சென்னை மற்றும் விருதுநகரில் இல்லை என்றும் மகாராஷ்ட்ராவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். ஹேபியஸ் கார்பஸ் மனு தொடர்பாக விருதுநகர் காவல்துறையினர் முன்னாள் கணவரின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று தேடியபோதும் குழந்தைகளை காணவில்லை.
மனுதாரர் கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டு டெலாவேருக்கு சென்றனர். பின்பு இந்த ஆண்டு மே மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
ஆகஸ்ட் மாதம் மனுதாரருக்கு தெரியாமல் அவரது முன்னாள் கணவர் அமெரிக்க நீதிமன்ற தீர்வு ஒப்பந்தத்தை மீறி மைனர் குழந்தைகளுடன் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். தற்போது சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினரின் உதவியுடன், மைனர் குழந்தைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பெண் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil