இந்திய உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியது. வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே என கூறியது.
இந்திய நீதிமன்றங்களில் அன்றாடம் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் பணியை தலைமை நீதிபதியே மேற்கொண்டு வருகிறார். உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் இது நடைமுறையாக இருந்து வருகிறது.
எனினும் புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்யும் மூத்த நீதிபதிகளை கொண்ட ‘கொலிஜியம்’ அமைப்புக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தால் என்ன? என்கிற விவாதங்களும் அவ்வப்போது எழுகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக 4 மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விவாதம் இன்னும் வலுப்பெற்றது.
இந்தச் சூழலில்தான் பிரபல சட்ட நிபுணரான சாந்தி பூஷன் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 6) இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. அதில் தலைமை நீதிபதியை, ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ என வர்ணித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, மொத்த நீதிமன்ற நடவடிக்கைகளையும் இயக்குபவர் என்பதாக அர்த்தப்படுத்த முடியும்.
நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் பணி தலைமை நீதிபதியிடமே தொடர்வதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. ‘இதில் கொலிஜியம் குறுக்கிட முடியாது’ என உத்தரவிட்ட நீதிபதிகள், ‘வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் கொலிஜியம் குறுக்கிட்டால் அன்றாடப் பணிகள் சிரமம் ஆகிவிடும்’ என்றும் சுட்டிக் காட்டினார்கள்.
இந்த அமர்வில் இரு நீதிபதிகளும் தனித்தனி உத்தரவுகளை பிறப்பித்தாலும், வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதியின் அதிகாரத்தை இருவரும் உறுதி செய்தனர்.