மனைவி, ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது : உச்ச நீதிமன்றம்

மனைவி, ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது என கணவன் - மனைவி இடையிலான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது.

மனைவி, ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது என கணவன் – மனைவி இடையிலான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது.

கணவர் கொடுமைப்படுத்துவதாக பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கணவர் தெரிவித்தார்.

மனைவி தரப்பில், ‘அவரது கொடுமையை தாங்க முடியாமலேயே புகார் செய்தேன். அவரிடன் இருந்து எந்த நிவாரணத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அவரை விவாகரத்து செய்யவே விரும்புகிறேன்’ என அழுத்தமாக வாதிடப்பட்டது. இருவரையும் ஏற்கனவே சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி, அங்கும் தீர்ப்பு எட்டப்படாத நிலையில் இந்த விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையின்போது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான கருத்துகளை நீதிபதிகள் குறிப்பிட்டனர். ‘இந்தப் பெண், உங்களது அசையும் சொத்து அல்ல. நீங்கள் அவரை கட்டாயப்படுத்த முடியாது. அவர் உங்களுடன் வாழ விரும்பவில்லை. அவருடன்தான் வாழ்வேன் என நீங்கள் எப்படி சொல்ல முடியும்?’ என நீதிபதிகள் மேற்படி கணவரை பார்த்து கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்த நீதிபதிகள், ‘உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வதே நல்லது’ என்றும் அந்த கணவரிடம் குறிப்பிட்டனர். ‘அந்தப் பெண், உயிரற்ற ஒரு பொருள் அல்ல. இவர் எப்படி அவரை தன் விருப்பம் போல நடத்த முடியும்? இவர் எப்படி இந்த அர்த்தமற்ற (சேர்ந்து வாழ) கோரிக்கையை வைக்க முடியும்?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேற்படி கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கருத்தைக் கூறி அவரை புரியவைக்க முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்தப் பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, ‘அந்த ஆண் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கைகூட வாபஸ் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம். எனது கட்சிக்காரர் விரும்புவது விவாகரத்தை மட்டும்தான்’ என உறுதியாக கூறினார்.

அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close