தொண்டு செயல்களின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது, ஆனால் தொண்டுக்கு பின்னால் உள்ள நோக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (டிச.5) கூறியது.
இது குறித்து உச்ச நீதிமன்றம், “தொண்டுகளின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது; ஒவ்வொரு தொண்டு அல்லது நல்ல செயலும் வரவேற்கப்படுகிறது; ஆனால் கருத்தில் கொள்ள வேண்டியது நோக்கம்" என்று நீதிமன்றம் கூறியது.
மிரட்டல், பரிசுகள் மற்றும் பண பலன்கள் மூலம் ஏமாற்றுதல் போன்ற மோசடியான மத மாற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற வழிகளில் மத மாற்றம் குறித்த தகவல்களை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து வருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அமர்வு முன் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் குறித்து விரிவான தகவல்களை அளிக்க கால அவகாசம் கோரினார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது கட்டாய மத மாற்றம் மிகவும் தீவிரமான விஷயம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/