லோக்ஆயுக்தா அமைக்கும் பணியை உடனே தொடங்குங்கள்! - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்தும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்தும், ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள மாநிலங்களில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்’ கடந்த 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன்படி, முதன் முதலில் மகாராஷ்ராவில் தான் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 15 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி எந்தவொரு தனி மனிதரும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடுக்க முடியும், இதன் விசாரணையில் அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ முறைகேடு, ஊழல் செய்தது கண்டறியப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்தல் ஆகிய வகைகளில் தண்டிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், தமிழகம், புதுவை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தெலங்கானா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் ‘லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? அவை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து 2 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரங்களை 12 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 9 பக்கங்கள் கொண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பாக மத்திய அரசின் திருத்தச்சட்டத்தில் தமிழக அரசுக்கு நிறைய முரண்பாடுகள் இருப்பதால் லோக் ஆயுத்தா சட்டத்தினை தற்போது செயல்படுத்த முடியாது’ என தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் இதை விசாரித்த ரஞ்சன் கோகோய் நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், லோக்பால், லோக் ஆயுக்தா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் உத்தரவிட்டனர்.

×Close
×Close