புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு, உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது, கிரண்பேடிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமியின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அடிக்கடி தலையிடுகிறார். அவர் மாநிலத்தில் நிழல் ஆட்சி நடத்தி வருகிறார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி அரசின் தினசரி நடவடிக்கைகளில் தலையிட, கிரண்பேடிக்கு அதிகாரம் கிடையாது என தீர்ப்பு வழங்கியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு அப்பீல்
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால், புதுச்சேரி அரசு செயல்படாமல் ஸ்தம்பித்துவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா அடங்கிய பெஞ்சிடம் கோரிக்கை வைத்தார்.
தடை விதிக்க மறுப்பு
மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.
-குமரன் பாபு