Advertisment

'கடவுளை அரசியலில் தள்ளி வையுங்க'... சந்திரபாபுவை கடுமையாக சாடிய சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

“திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வு முடிகள் ஜூலையில் உங்களுக்கு அறிக்கை கிடைத்த நிலையில், அதனை நீங்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிட்டது ஏன்?" என்று உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme Court questions Chandrababu Naidu Govt on Tirupati laddu row Tamil News

திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் தலைமையிலான முந்தைய அரசு கலந்ததாக ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவரது குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், 'சந்திரபாபு கடவுளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார்' என்று ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Supreme Court questions Naidu Govt on Tirupati laddu row

இந்த விவகாரம் தொடர்பாக முழு அறிக்கை கேட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்திருந்தார். இதனிடையே, இதுகுறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு - சரமாரி கேள்வி

இதற்கிடையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று திங்கள்கிழமை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, "லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாதபோது சோதனைக்கு அனுப்பினோம். 2-வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது" என ஆந்திர அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். 

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி விஸ்வநாதன், “ திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வு முடிகள் ஜூலையில் உங்களுக்கு அறிக்கை கிடைத்த நிலையில், அதனை நீங்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிட்டது ஏன்?. விசாரணைக்கு உத்தரவிட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்ட நெய், அப்போது பயன்படுத்தப்பட்ட நெய் அல்ல என்பது அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கு உறுதியாக தெரியாவிட்டால், அதனை ஏன் பொதுவெளியில் வெளிப்படுத்தினீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நீதிபதி கவாய்,"சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டீர்கள். அத்தகைய விசாரணையின் முடிவுகள் வரும் முன்பே ஊடகங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்,” என்று கூறினார்.

மேலும் நீதிபதிகள், "திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய ஒரு அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவது பொருத்தமானதல்ல என்று நாங்கள் முதன்மையாகக் கருதுகிறோம். நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கையில் உறுதியாக கூறப்படாவில்லை. சோயாபீன் அல்லது தேங்காய் எண்ணெய் கூட இருக்கலாம் என ஆய்வக அறிக்கை கூறுகிறது. அதற்கு, லட்டு பிரசாத்தில் மீன் எண்ணெய் கலக்கப்பட்டது என்று அர்த்தமாகாது. 

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி குழு அமைக்கப்படுவதற்கு முன்பே முதல்வர் நாயுடு முடிவு பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார். ஆந்திரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமா? அல்லது புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா? என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து, இந்த வழக்கை அக்டோபர் 3-ம் தேதி மறு விசாரணைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Supreme Court Tirupati Supreme Court Of India Chandrababu Naidu Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment