நோட்டீஸ் கொடுக்காமல் சாலையை விரிவுபடுத்துவதற்காக வீட்டை இடித்த உத்தரபிரதேச அதிகாரிகளின் "அதிகாரபோக்கு" அணுகுமுறையை கண்டித்த உச்ச நீதிமன்றம், வீட்டின் உரிமையாளருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க புதன்கிழமை உத்தரவிட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court raps UP Govt for demolition of house, orders Rs 25 lakh compensation: ‘this is lawlessness’
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2019 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்ட மஹராஜ்கஞ்ச் குடியிருப்பாளரான மனோஜ் திப்ரேவால் ஆகாஷின் கடிதப் புகாரின் அடிப்படையில் 2020 இல் பதிவுசெய்யப்பட்ட ரிட் மனுவை தானாக முன்வந்து விசாரித்தது. நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரும் பெஞ்சில் இருந்தனர்.
"இது முற்றிலும் அதிகாரபோக்கு உடையது. உரிய நடைமுறை எங்கே பின்பற்றப்பட்டுள்ளது? எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று உறுதிமொழிப் பத்திரம் எங்களிடம் உள்ளது. நீங்கள் தளத்திற்குச் சென்று ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குத் தெரிவித்தீர்கள்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்ற மிஸ்ராவின் வாதத்திற்கு, தலைமை நீதிபதி சந்திரசூட், “அவர் 3.7 சதுர மீட்டர் அத்துமீறல் செய்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் அதை எடுத்துக்கொள்கிறோம். அதற்கான நற்சான்றிதழை நாங்கள் அவருக்கு வழங்கவில்லை. ஆனால் நீங்கள் எப்படி மக்களின் வீடுகளை இடிக்க ஆரம்பிக்க முடியும்? என்று கேட்டார். "இது சட்டவிரோதம்... யாரோ ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து அதை எந்த அறிவிப்பும் இல்லாமல் இடிப்பது சட்டவிரோதம்" என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.
இது "மிகவும் அதிகாரபோக்கு உடையது" என்று நீதிபதி பார்திவாலா கூறினார், "நீங்கள் புல்டோசர்களுடன் வந்து ஒரே இரவில் வீடுகளை இடிக்க முடியாது. குடும்பத்தை காலி செய்ய நீங்கள் நேரம் கொடுக்கவில்லை. வீட்டுப் பொருட்கள் பற்றி என்ன? முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்," என்று கூறினார்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு பொது அறிவிப்பின் மூலம் மட்டுமே இடிப்பு தொடங்குவது குறித்து குடியிருப்பாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டதற்கு பெஞ்ச் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. “வீட்டைக் காலி செய்து இடித்துத் தள்ளுங்கள் என்று பறை அடித்து மக்களிடம் சொல்ல முடியாது. முறையான அறிவிப்பு இருக்க வேண்டும்” என்று நீதிபதி பார்திவாலா கூறினார்.
இழப்பீடு வழங்க உத்தரவிடுவதுடன், இடிப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது விசாரணை நடத்தவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உ.பி.யின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.