மகாராஷ்டிராவில் யார் உண்மையான சிவசேனா என்ற போட்டி தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு தரப்பும் மாறிமாறி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏக்நாத் ஷிண்டே மற்றும் தாக்கரே தரப்பு மனுக்களை தலைமை நீதிபதி, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது முடிவு எடுப்பதைத் தவிர்க்குமாறும், தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த வழக்கு வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு இந்தக் கூட்டணி பிரிந்தது. தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் மகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.
மகா விகாஷ் அகாதி என்று அழைக்கப்பட்ட இந்தக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் சரியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் வெளியேறிய சிவசேனா மூத்தத் தலைவர், தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இருவரும் தற்போது கட்சியின் சின்னத்தை கைப்பற்ற போட்டிப்போட்டுவருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பும் மாறிமாறி மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
ஏக்நாத் ஷிண்டே மீதான மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்கவேண்டாம் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”