கொல்கத்தாவின் ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்காக மேற்கு வங்க அரசைக் கண்டித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/supreme-court-west-bengal-govt-fir-kolkata-rape-murder-case-9523344/?ref=breaking_hp
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியதை இங்கே பார்க்கலாம்:
*கொல்கத்தா காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது, உடலை ஏன் பெற்றோரிடம் தாமதமாக ஒப்படைத்தார்கள், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய நாசக்காரர்கள் மருத்துவமனைக்குள் நுழைய அனுமதித்தது எப்படி என்று கேட்டது.
*“மருத்துவமனையில் நடந்த நாசவேலை விவகாரத்தை அரசால் எப்படி கையாள முடியவில்லை என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மீண்டும் வலியுறுத்தினார்.
*“அதிகாலையிலேயே குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது, மருத்துவக் கல்லூரி முதல்வர் அதை தற்கொலை என்று சொல்ல முயன்றார்” என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
*மேலும், மேற்கு வங்க அரசாங்கத்தின் அதிகாரத்தை போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
*ஆர்.ஜி. கார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் முதல்வரை வேறு கல்லூரிக்கு நியமித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, அவரது நடத்தை இன்னும் ஆய்வுக்கு உட்பட்டது என்று கூறியது.
*பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலையான பெண்ணின் அடையாளம், அவரது பெயர் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டதற்கு நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு தழுவிய அளவில் போராட்டத்தைத் தூண்டியது. ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையின் நெஞ்சக பிரிவில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடுமையான காயங்களுடன் அந்த பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அடுத்த நாள் இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறையால் குடிமைத் தன்னார்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இது கூட்டு பாலியல் பலாத்காரம் என்றும் இதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான முறையான பிரச்சினைகளை எழுப்புகிறது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பணிச்சூழல் பாதுகாப்பாக இல்லாமலும் இருந்தால், அவர்களுக்கு சம உரிமை மறுக்கிறோம் என்று உச்ச நீதிமன்றா நீதிபதிகள் தெரிவித்தனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒரு வாரத்தை நிறைவு செய்து இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காது” என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“