முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உரைகளைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தொலைதூரப் பகுதிகளில் இருந்து மக்கள் கூடிவருவதாகக் கூறியதுடன், உதிரி சக்திகள் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக தினசரி பேச்சுக்களை நிகழ்த்துவதாகக் கூறியுள்ளது.
வெறுப்புப் பேச்சுக்களைத் தூண்டும் சக்திகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து, அரசியலும் மதமும் பிரிக்கப்பட்டு, அரசியல்வாதிகள் அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், பேச்சுக்கள் இல்லாமல் போய்விடும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யத் தவறியதற்காக பல்வேறு மாநில அரசுகளுக்கு எதிரான அவமதிப்பு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது. “அரசியலும் மதமும் பிரிக்கப்படும் தருணத்தில், இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், இவை அனைத்தும் நின்றுவிடும்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்கள் ஏன் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்று கேள்வி எழுப்பினர். “ஒவ்வொரு நாளும், உதிரி சக்திகள் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக டிவி மற்றும் பொது விவாதம் உள்ளிட்ட தளங்களில் பேசுகின்றன. மற்ற மக்களை அல்லது சமூகங்களை இழிவுபடுத்த மாட்டோம் என்று இந்திய மக்கள் ஏன் உறுதிமொழி எடுக்கக் கூடாது” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.
மேலும், அவர் “சகிப்புத்தன்மை என்றால் என்ன? சகிப்புத்தன்மை என்பது யாரையும் சகித்துக்கொள்வது அல்ல, மாறாக வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது” என்று கூறினார்.
முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உரைகளை நீதிபதி பி.வி.நாகரத்னா குறிப்பிட்டார். “நாம் எங்கே போகிறோம்? பண்டித ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற பேச்சாளர்கள் இருந்தனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இப்போது அனைத்து தரப்பிலிருந்தும் உதிரி சக்திகள் வெறுப்பு பேச்சுக்களை வெளியிடுகின்றன. இப்போது நாம் அனைத்து இந்தியர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகிறோமா? சகிப்பின்மை என்பது அறிவு மற்றும் கல்வியின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது.” என்று கூறினார்.
இதற்கிடையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக கேரளாவில் ஒரு நபர் பேசிய இழிவான பேச்சையும் சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டில் நடக்கும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை மனுதாரர் ஷாஹீன் அப்துல்லா தேர்ந்தெடுத்து சுட்டிக்காட்டியுள்ளதாக கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”