நீட் தேர்வு மீதான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் குறித்த புகார்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறைக் கால அமர்வு, ஹிட்டன் சிங் காஷ்யப் தாக்கல் செய்த பொதுநல வழக்கு உட்பட மனுக்களை விசாரித்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ மற்றும் பீகார் அரசாங்கம் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் செயல்படத் தொடங்கும் ஜூலை 8 ஆம் தேதி நிலுவையில் உள்ள மற்ற மனுக்களுடன் இந்த மனுக்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கில் விசாரணையின் போது, சி.பி.ஐ விசாரணை கோரும் தனது வழக்கை வலுப்படுத்தும் ஒரு வாதமாக ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் பயிற்சி மையங்களின் மையமான கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டது இதனால், நீதிமன்ற அமர்வு கோபமடைந்தது.
இதற்கு, “தேவையற்ற உணர்ச்சிகரமான வாதங்களை இங்கு செய்ய வேண்டாம்” என்று நீதிபதி நாத் கூறினார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை விசாரித்த பதிலளித்த நீதிமன்ற அமர்வு, உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தேசியத் தேர்வு முகமையின் (என்.டி.ஏ) பதில் அவசியம் என்று கூறியது.
அப்போது, “இது 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம்” என்று வழக்கறிஞர் கூறினார்.
“எங்களுக்குப் புரிகிறது. அதையெல்லாம் நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பிற படிப்புகளில் சேர்வதற்காக தேர்வெழுதிய 1,563 விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு மற்றும் என்.டி.ஏ வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தன.
அவர்கள் மீண்டும் தேர்வில் ஈடுபடலாம் அல்லது நேர இழப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு மதிப்பெண்களை கைவிடலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நீட் தேர்வானது (NEET-UG) எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் மற்றும் இதர தொடர்புடைய படிப்புகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சேர்க்கைக்காக தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
மே 5-ம் தேதி 4,750 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடைத்தாள்களின் மதிப்பீடு முன்னதாகவே முடிந்ததால், ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பீகார் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் வெளியானதாகவும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் பல நகரங்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது, 7 உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக்கோரி ஜூன் 10-ம் தேதி டெல்லியில் ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தேசியத் தேர்வு முகமையின் வரலாற்றில், 67 மாணவர்கள் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தைச் சேர்ந்த 6 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 67 மாணவர்கள் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ள கருணை மதிப்பெண்கள் பங்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“