மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீதான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த இரண்டு வாரமாக இணையதளங்களில் அதிகம் பேசப்பட்ட நபர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ள பிரியா, ஒரே நாள் இரவில் நாடு முழுவதும் பிரபலமானர். ஒரு அடார் லவ் படத்தில் இருந்து 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியானது.
அந்த பாடலில், தனது காதலனை பார்த்து ப்ரியா காட்டும் கண் அசைவுகள் ஒட்டு மொத்த இளைஞர்களை கவர்ந்தது. அதன் பின்பு, பிரியா புகழின் உச்சத்திற்கே சென்றார். அவரின், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ரசிகர்களால் நிரம்பியது. இணையத்தில் லேட்டஸ்ட் வைரலில் பிரியாவிற்கே முதலிடம்.
இந்நிலையில், நடிகை பிரியா வாரியர் மீது மும்பையில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரியா நடித்துள்ள 'மாணிக்ய மலராய பூவி' பாடல் வரிகள் முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி, இஸ்லாமிய அமைப்பினர் சில வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த பாடலை இணையத்தில் இருந்து நீக்கக்கோரியும், இதில் நடித்ததிற்காக பிரியா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, நடிகை பிரியா பிரகாஷ் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (20.2.18) மனு ஒன்றை தாக்கல் செய்தார். எந்தவிதக் காரணமுமின்றி முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமையை முடக்கும் செயல். இதுபோன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று, உச்ச்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். அடுத்த கட்டமாக இந்த மனு விசாரிக்கப்படும் வரை எவ்வித கிரிமினல் விசாரணைகளும் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியைக் கேட்ட, பிரியாவின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கொண்டாட துவங்கியுள்ளனர்.