Surat : Constable Sunitha Resigns her job for stopping BJP minister's son roaming on curfew hours : கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. பலரும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற ஒரு சிலர் தங்களிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பெருங்கொள்ளை நோய் காலத்திலும் விதிகளை மீறி நடந்து கொள்கின்றனர்.
குஜராத்தின் சூரத்தில் காவலராக பணியாற்றுபவர் சுனிதா யாதவ். கடந்த வாரம் இரவு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பகுதியில் விதிமுறைகளை மீறி ஐந்து பேர் ஒரே காரில் பயணித்து வந்துள்ளனர். அவர்கள் யாரும் மாஸ்க் கூட அணியவில்லை.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் நாங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரகாஷ் கனானிக்கு விசயத்தை தெரிவிக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். நண்பர்களை விடக் கூறி கேட்ட போது அவர் மறுத்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டது.
ஊரடங்கு நேரத்தில் நீங்கள் யாரை கேட்டு வெளியே வந்தீர்கள்? உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது என்று வாக்குவாதம் தீவிரம் அடைந்தது. இந்நேரத்தில் பிரதமரே வந்தாலும் அவரையும் நிறுத்தியிருப்பேன் என்று கூறியுள்ளார் சுனிதா.
சுனிதா தன்னுடைய உயர் அதிகாரிக்கு கால் செய்து விவரங்களை கூற அவரோ சுனிதாவை அந்த இடத்தில் இருந்து வெளியேறிக் கொள்ளும் படி கேட்டிருக்கிறார். வேறு வழியின்றி அவர் அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர்கள் வாக்கு வாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரல் ஆனது. சுனிதாவுக்கு பாராட்டுகளும், பாஜக அமைச்சர் மகனுக்கு கடும் கண்டனங்களும் எழுந்தது. இதனை தொடர்ந்து பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து உயர் மட்டத்தில் இருந்து தரப்பட்ட அழுத்தம் காரணமாக சுனிதா தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil