மீண்டும் ஒரு அவலம் : சூரத்தில் 86 நக காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு

சிறுமி 8 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்

குஜராத்தின் பெஷ்தன் பகுதியில்  அடையாளம் தெரியாத சிறுமியின்  உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

குஜராத்தில், 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது சம்பவம் நாடு முழுவடதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,தற்போது அதே போல் மற்றொரு நிகழ்வு  அரங்கேறியுள்ளது. குஜராத்தின் பெஷ்தன் பகுதியில் உள்ள புதர் பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சிதைந்த நிலையில் சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த சிறுமியின் வயது 8 லிருந்து 11 வயதிற்குள் இருக்கலாம் என்று  காவலர்கள் தெரிவித்திருந்தனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பிரேத அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொல்லப்பட்ட சிறுமி 8 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவரது உடம்பில் 86 இடங்களில் காயம் இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது உடலில் பல காயங்கள் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள், அந்த சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.சிறுமியின் அங்க அடையாளங்களை கொண்டு அவரது தகவல்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இதுவரை சிறுமியின் பெற்றோர்கள் குறித்த எந்தவித தகவலும் தெரியாததால், இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் குழம்பியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து தருபவர்களுக்கு ரூ.20000 பரிசு வழங்கப்படும் என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. உன்னா, கத்துவா சம்பவங்கள் குறித்த போராட்டங்கள் நாடெங்கிலும் வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

 

 

×Close
×Close