Surgical Strike Video: 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ என்று சொல்லப்படும், தீவிரவாத முகாம் அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது தொடர்பான வீடியோ (surgical strike video) ஆதாரங்கள் தற்போது வெளியாகி புதிய பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று 7 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது என்று அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வந்தன. ஆனால் இதனை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்திய ராணுவ உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகியுள்ளன.
இந்த வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 7 பதுங்குக் குழிகளை இந்திய ராணுவம் அழித்த போது எடுக்கப்பட்டது. ஆளில்லா விமானம் மற்றும் 'தெர்மல் இமேஜிங், கேமராக்களால் இவ்வீடியோக்கள் எடுக்கப்பட்டு ராணுவ தலைமைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராணுவத் தளபதிகளின் கருத்து
இதைப் பற்றி ஓய்வு பெற்ற முன்னாள் வடக்கு மாகாண ராணுவத் தளபதி ஹூடா குறிப்பிடுகையில் “இந்த வீடியோக்கள் அனைத்தும் உண்மை என்பதை என்னால் நிரூபிக்க இயலும்” என்று குறிப்பிட்டார். அவருடைய தலைமையில் நடத்தப்பட்ட இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் நேரலை, நேரடியாக அவருடைய உதம்பூர் அலுவலகத்தில் அன்று ஒளிபரப்பட்டவை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் “இந்த வீடியோக்களை அப்போதே, ஆதாரங்களாக வெளியிட்டிருக்க வேண்டும். இப்போது வெளியானதிலும் கூட எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார்.
அப்போதைய ராணுவ நடவடிக்கைகளின் தலைவராக பணியாற்றிய ராணுவ தளபதி ரன்பீர் சிங் இதைப்பற்றி குறிப்பிடுகையில் “செப்டம்பர் 29, 2016ஆம் ஆண்டு, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஏழு முக்கிய தீவிரவாத பதுங்குக் குழிகளை தாக்கி அழித்தோம். அதன் விளைவாக நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டது” என்றார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் விருதுகள் கொடுத்து கௌரவித்தது. இந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை, ஹிஸ்டரி8 என்ற தொலைக்காட்சியில் டாக்குமெண்ட்டரியாக வெளியிடப்பட்டது.
இதுகுறித்து அக்டோபர் 7, 2016ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில் செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை ஒரு ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு, புதைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வினை நேரில் கண்ட சாட்சியங்களின் கருத்துகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஆதரங்களை வெளியிடச் சொல்லி, மத்திய அரசிடம் கேட்ட போது, “இது ராணுவ வீரர்களின் வீரமிக்க செயலை அவமதிக்கும் செயல்” என்று கூறி ஆதாரத்தினை தர மறுத்துவிட்டது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதிற்கான அறிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்டது. ஆகவே வீடியோ ஆதாரங்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியது மத்திய அமைச்சகம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.